கோவை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார்.

Update: 2021-09-17 04:30 GMT

பலியான சின்னசாமி.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்து விராலியூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. விவசாயியான இவருக்கு தண்டுக்காரன் கோவில், மலை அடிவாரத்தில் சொந்தமாக தோட்டம் உள்ளது. அத்தோட்டத்திற்கு சின்னசாமி வழக்கமாக இரவு நேர காவலுக்கு செல்வது வழக்கம்.

நேற்று வழக்கம்போல் இரவு காவலுக்கு சென்றுள்ளார். இன்று அதிகாலை 1 மணி அளவில் தோட்டத்திற்குள் ஒற்றை யானை புகுந்ததை பார்த்துள்ளார். அந்த யானை வெங்காயம் சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டறையை சேதப்படுத்துவதை கவனித்த சின்னசாமி, டார்ச்லைட் மூலம் ஒளி ஏற்படுத்தி, யானையை விரட்ட முயன்றுள்ளார்.

இதனால் கோபமடைந்த யானை, சின்னசாமியை நோக்கி ஓடி வந்தது. அங்கிருந்து வீட்டுக்குள் ஓட முயன்ற சின்னசாமியை,   யானை தும்பிக்கையால் தூக்கி வீசி மிதித்துள்ளது. அவரின் அலறல் சத்தத்தை கேட்ட பக்கத்து தோட்டத்தில் இருந்தவர்கள், அங்கு வந்து சத்தம் எழுப்பி யானையை விரட்டினர்.  பின்னர், படுகாயமடைந்த சின்னசாமியை மீட்டு தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக சின்னசாமியின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவலறிந்த போளுவாம்பட்டி வனத்துறையினர் மற்றும் ஆலாந்துறை போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து யானை தாக்கியது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News