கோவையில் காங்கிரஸ் கட்சிக்கு சீட் வழங்க எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் போராட்டம்

காங்கிரஸ் கட்சிக்கு 89வது வார்டை ஒதுக்க கூடாது என அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Update: 2022-02-02 09:15 GMT

திமுகவினர் போராட்டம்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிடுவது குறித்த தொகுதி பங்கீடு நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனிடையே கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள 89 வது வார்டை ஒதுக்கியுள்ளதாக கூறி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அப்பகுதி திமுகவினரிடம் ஆதரவு கோரியதாக தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த திமுகவினர், அப்பகுதியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு 89வது வார்டை ஒதுக்க கூடாது என அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது பேசிய அவர்கள், முன்பு குனியமுத்தூர் பேரூராட்சியாக இருந்த போது, திமுக, காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களில் வென்றிருந்த போதும், 4 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸ் 9 இடங்கள் மட்டுமே வென்ற அதிமுகவுடன் ரகசிய கூட்டணி அமைத்து, பேரூராட்சி தலைவர் பதவியை காவு கொடுத்ததாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக செயல்படும் அப்பகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு தொகுதியை ஒதுக்க கூடாது என வலியுறுத்திய அவர்கள், எனவே தான் வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்னதாகவே ஆர்பாட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தனர். தொகுதி அறிவிக்கும் முன்பாகவே திமுக கூட்டணியில் முரண்பாடு எழுந்துள்ளது அக்கூட்டணி கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News