அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது 1500 கோடி ஊழல் புகார்
கோவையில் அனைத்து துறை ஒப்பந்தங்களிலும் 12 சதவீதம் கமிஷன் பெறுவதை முன்னாள் அமைச்சர் வேலுமணி வாடிக்கையாக வைத்திருந்ததாக புகார்;
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாத். ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என அழைக்கப்படும் இவர் சிறுவாணி என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.முன்னாள் அதிமுக உறுப்பினரான அவர் அக்கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்தார்.
இந்த நிலையில் கோவையில் அனைத்து துறை ஒப்பந்தங்களிலும் 12 சதவீதம் கமிஷன் பெறுவதை முன்னாள் அமைச்சர் வேலுமணி வாடிக்கையாக வைத்திருந்ததாகவும், இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் சிலர் உடந்தையாக செயல்பட்டதாக கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் மனு அளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோவை மாநகரில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணி கோடிக்கணக்கில் மோசடி செய்து ஊழல் செய்து இருப்பதாகவும் சில மாநகராட்சி அதிகாரிகளின் உதவியுடன் ஒவ்வொரு திட்டங்களுக்கு 12 சதவீத கமிஷன் பெற்றதாக குற்றம் சாட்டினார். இதன் காரணமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் புனரமைப்பு மற்றும் ரேஸ்கோர்ஸ் சாலையில் அழகுபடுத்தும் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை என கூறிய அவர், 1500 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் பணத்தை கொள்ளையடித்த முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இது தொடர்பாக உயரதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார்.