கோவையில் பணத்திற்காக விஷ ஊசி செலுத்தி கொலை செய்த தம்பதி கைது

ஓட்டுநரை கட்டையால் அடித்தும் விஷ ஊசி செலுத்தியும் கொலை செய்தது தெரிய வந்தது.

Update: 2022-02-11 16:45 GMT

கைது செய்யப்பட்டவர்கள்.

கோவை மாவட்டம் ஓணாப்பாளையம் பகுதியில் கடந்த 9ஆம் தேதி தனியார் டாக்சி ஓட்டுனர் சானு (31) என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததை தொடர்ந்து அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உடலை உறவினர்கள் மற்றும் சக டாக்சி ஓட்டுநர்கள் வாங்க மறுத்து அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்ததை தொடர்ந்து அவரது உடல் பெற்றுக் கொள்ளப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் 8ம்தேதி தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் அந்த டாக்ஸியில் பயணித்தது தெரிய வர அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பணத்திற்காக அவரும் அவரது மனைவி அமலோற்பவம் சேர்ந்து ஓட்டுநரை கட்டையால் அடித்தும் விஷ ஊசி செலுத்தியும் கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்திய மரத்தடி, 6100 ரூபாய் பணம், லேப்டாப் 20 க்கும் மேற்பட்டது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து இருவரையும் சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் இருவர் மீதும் ஏற்கனவே இது போன்ற விஷ ஊசி செலுத்தி கொலை செய்த இரண்டு கொலை வழக்குகள், ஆயுத வழக்கு ஆகியவை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

Tags:    

Similar News