சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்

கோவை, குனியமுத்துாரில் பழைய குடோன் ஒன்றில் பதுங்கி உள்ள சிறுத்தையை பிடிக்கும் பணியில், 3வது நாளாக வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2022-01-19 04:15 GMT

சிசிடிவி கேமராவில் பதிவான சிறுத்தை

கடந்த, 17ம் தேதி குனியமுத்துார் பி.கே.புதுாரில் உள்ள ஒரு பழைய குடோனில், சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை பதுங்கியது. இதுகுறித்து அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர். சிறுத்தையை பிடிக்க, குடோன் நுழைவுவாயிலில் இரண்டு கூண்டுகள் அமைத்து அதில் மாமிசம் வைத்து காத்திருந்தனர். முதல்நாள் முயற்சி வெற்றி பெறாத நிலையில், நேற்றும் சிறுத்தையை பிடிப்பதற்கான பணி தொடர்ந்தது.நேற்று காலை முதலே பல்வேறு முயற்சிகளை வனத்துறையினர் மேற்கொண்டும், சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.

இதனால், மின் விளக்குகள் அமைத்து இரவு நேரத்தில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். குடோனில் சிறுத்தையின் நடவடிக்கைகளை கண்காணிக்க, ட்ரோன் கேமரா பறக்க விடப்பட்டது. ட்ரோன் கேமரா பழைய கழிவுப்பொருட்களில் சிக்கிக் கொண்டதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால், 10 அடி உயர கம்பத்தில், சிசிடிவி கேமரா பொருத்தி, கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த சிசிடிவி கேமராக்களில் இன்று அதிகாலை சிறுத்தையின் நடவடிக்கைகள் பதிவானது. அந்த காட்சிகளை வனத்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

அதில் எவ்வித பயமுமின்றி சிறுத்தை சர்வசாதாரணமாக குடோனுக்கு உலாவி காட்சிகள் பதிவாகியுள்ளது. குடோன் பாழடைந்த நிலையில் உள்ளதால் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் சிக்கல் உள்ளது எனவும், அதனால் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ள வனத்துறையினர், சிறுத்தை விரைவில் கூண்டில் சிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News