முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வங்கி லாக்கரில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வங்கி லாக்கரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையிட்டனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 810 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு செய்ததாக 2018 ம் ஆண்டில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இலஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதியன்று எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 60 க்கும் மேற்பட்ட இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
இதில் 13 இலட்ச ரூபாய் பணம், 2 கோடி ரூபாய்க்கான வைப்புத்தொகை, முக்கிய ஆவணங்கள், பத்திரங்கள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது.
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 11 மணி நேர சோதனையில், வங்கி பாதுகாப்பு பெட்டக சாவி கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி குனியமுத்தூர் பகுதியில் எஸ்.பி.வேலுமணி கணக்கு வைத்துள்ள வங்கியில், பாதுகாப்பு பெட்டகத்தை திறந்து இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்துள்ளனர்.
அப்போது வங்கி கணக்கு மற்றும் பாதுகாப்பு பெட்டகம் குறித்த ஆவணங்களை பெற்றதோடு, பாதுகாப்பு பெட்டகம் எப்போது கடைசியாக திறக்கப்பட்டது உள்ளிட்டவை குறித்தும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் வங்கி அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.