குளத்தில் 7 சுவாமி சிலைகள் மீட்பு - போலீஸ் விசாரணை

Update: 2021-02-22 09:30 GMT

கோயமுத்தூரில் குளத்தில் 7 சுவாமி சிலைகள் கிடைத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயமுத்தூர் பேரூர் பகுதியில் உள்ள புட்டுவிக்கி பெரிய குளத்தின் அருகே அதே பகுதியை சேர்ந்த சிலர் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஓய்வு எடுப்பதற்காக குளத்தின் அருகே நின்றுள்ளனர். பின் குளத்தில் பார்த்த போது தண்ணீரின் உள்ளே சாமி சிலைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் உடனடியாக பேரூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார், குளத்தில் சிலைகள் கிடப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து போலீசார், வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த அதிகாரிகள் குளத்தில் இருந்த விஷ்ணு, துர்க்கை, மகாலட்சுமி, அம்மன், கிருஷ்ணர், விநாயகர் சரஸ்வதி உள்ளிட்ட கடவுள் உலோக சிலைகளுடன் ஒரு அம்மன் கற்சிலை என 7 சிலைகளை மீட்டு, சிலைகளின் உண்மை தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தொல்லியல் துறையினரின் ஆய்வுக்குப் பிறகு குளத்தில் கைப்பற்றப்பட்ட சிலைகள் பழமையான சிலைகளா? எவ்வளவு ஆண்டுகள் பழமையானவை? எந்த கோவிலுக்கு சொந்தமானவை? என்பது குறித்த தகவல்கள் தெரியவரும்.

இது தொடர்பாக பேரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கடத்தலுக்காக சிலைகள் குளத்தில் மறைக்கப்பட்டதா என்ற கோணத்தில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் விசாரணையை துவக்கியுள்ளனர். சம்பவ இடத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்‌.பி ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News