கோவை அருகே வனவிலங்கு வேட்டைக்கு சென்ற போது நாட்டு துப்பாக்கி வெடித்து ஒருவர் பலியானார்.
கோவை மாவட்டம் பேரூரை அடுத்த தீத்திபாளையம் மாதேஷ் கவுண்டர் வீதியை சேர்ந்தவர் அய்யாசாமி. இவர் தனது நண்பர்களான ஆனந்த், பாபு, ரங்கநாதன், ராமசாமி, ரங்கநாதன், ஆகியோருடன் தீத்திபாளையம் அருகே உள்ள ஐயாசாமி கோவில் வனப்பகுதியில் காட்டு பன்றி வேட்டைக்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் சட்ட விரோதமாக வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியில் அய்யாசாமி வெடிமருந்தை நிரப்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்து அய்யாசாமியின் அடி வயிறு மற்றும் தொடைப் பகுதியில் துப்பாக்கி குண்டு சிதறல்கள் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அய்யாசாமி உயிரிழந்தார்.
இதனை அடுத்து அவரது நண்பர்கள் அய்யாசாமியின் உடலை காவல்துறைக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேரூர் காவல் துறைக்கு தகவல் சென்றதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஐயாசாமி உடலை கைப்பற்றி அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் அய்யாசாமி மற்றும் அவரது நண்பர்கள் அந்தப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் வேட்டைக்குச் செல்வது வழக்கமாம். அவ்வாறு நேற்று சென்றபோது அவர்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி திடீரென வெடித்ததால் அய்யாசாமி உடலில் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 5 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.