கோவையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு

Update: 2021-01-05 05:15 GMT

கோயமுத்தூர் மாவட்டத்தில் மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவத்தில் தோட்ட உரிமையாளர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான ஆலாந்துறை, வெள்ளியங்கிரி மலை பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் சோளம், வாழை, நெல், பயிரிடப்பட்டுள்ளதால் உணவு தேடி நாள்தோறும் யானைகள் அப்பகுதிக்கு வருவது அதிகரித்துள்ளது.இந்நிலையில் நேற்று இரவு போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட செம்மேடு கிராமத்திற்குள் 2 ஆண் யானைகள் தனித்தனியாக வந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த வனத்துறையினர் ஒற்றை ஆண் யானையை இன்று அதிகாலை 5.30 மணி அளவில் முள்ளாங்காடு வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இந்நிலையில் இதனுடன் வந்த மற்றொரு யானை செம்மேடு குளத்து ஏரி பகுதியில் உள்ள துரை என்பவரது விவசாய நிலத்திற்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற்கதிர்களை சாப்பிட்டு உள்ளது. பின்னர் அங்கிருந்து வெளியேறும் போது வயலை சுற்றி போடப்பட்டிருந்த உயர் மின்னழுத்த வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து காலையில் அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போளுவாம்பட்டி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் உயிரிழந்த யானைக்கு 20 வயது இருக்கும் எனவும், ​​பண்ணை வயலைச் சுற்றி இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டிருப்பதும், வயர் மூலம் மின்சாரம் பிரதான கம்பத்தில் இருந்து திருடப்பட்டு இரும்பு கம்பி வேலிக்கு செலுத்தியதும் தெரியவந்தது. மேலும் யானை வேலியில் இறந்தவுடன் உரிமையாளர் இரும்பு கம்பி வேலிக்கு மின்சாரம் வழங்கிய வயர்களை அகற்றிவிட்டு தலைமறைவாகியுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து தோட்ட உரிமையாளர் துரை மீது வன உயிரின சட்டத்தின் கீழ் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News