கோவை தொகுதியில் அண்ணாமலைக்கு மூன்றாவது இடம் தான்: எஸ்.பி. வேலுமணி

தேர்தல் களத்தில் பூத்தில் வேலை செய்வதற்கு முதலில் பாஜக ஆட்களை போடட்டும், பின்னர் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பார்க்கலாம் என கூறினார்

Update: 2024-04-15 14:16 GMT

ஆல் சோல்ஸ் தேவாலயத்தில் பேராயர் திமொத்தி ரவீந்தரை நேரில் சந்தித்து கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுடன் இணைந்து வாக்கு சேகரித்த எஸ்.பி.வேலுமணி

கோவை பந்தைய சாலையில் உள்ள ஆல் சோல்ஸ் தேவாலயத்தில் பேராயர் திமொத்தி ரவீந்தரை நேரில் சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுடன் இணைந்து வாக்கு சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "வெறும் மூன்று சதவீத வாக்கு வைத்திருக்கும் பாஜக கோவையில் வெல்லப்போவது இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் வெற்றி பெறுவது 100 சதவிகிதம் உறுதி. பாஜக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும். கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக மக்களுக்காக எதையும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் கோவையை மாற்றி காட்டியுள்ளோம். ஐந்து ஆண்டுகளில் 50 ஆண்டுகள் வளர்ச்சியை கோவையில் செய்துள்ளோம்.

மேலும், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவால் தான் கோவையில் பாஜக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது என்பது அனைவருக்கும் தெரியும். ஆட்களை வைத்து போலியான கருத்துக் கணிப்புகளை பாஜகவினர் வெளியிட வைத்து வருகின்றனர்.

பாஜகவின் அண்ணாமலை 38 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்றும், இரண்டாவது இடத்தில் 33% வாக்குகளை திமுக பெரும், அண்ணா திமுகவைச் சேர்ந்த சிங்கை இராமச்சந்திரன் 18.5% வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்திற்கு செல்வார் என்றும், பாஜகவை ஃபோக்கஸ் செய்து மீடியாவில் ஒரு மாயையை உருவாக்கி வருகிறார்கள். பாஜகவிற்கு நான்கு எம்எல்ஏக்களை வெற்றி பெறச் செய்தது அதிமுக தான்.

மக்களவை தேர்தல் களத்தில் பூத்தில் வேலை செய்வதற்கு முதலில் பாஜக ஆட்களை போடட்டும், பின்னர் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பார்க்கலாம். களத்தில் அதிமுக மட்டும் தான் உள்ளது.

அதிமுக பொன்விழா கண்ட கட்சி. 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்ட கட்சி, அப்படி இருக்கையில் வந்து மூன்றாண்டுகள் ஆன அண்ணாமலை அதிமுகவை அழித்துவிடுவேன், எடப்பாடியாரை காணாமல் செய்து விடுவேன் என்று வாய்க்கு வந்தபடி பேசுவது நியாயமா? அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் உள்ளார்கள்.

கோவை விமான விரிவாக்கத்திற்கு நிதி ஒதுக்கி 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி கொடுத்தது எடப்பாடியார் ஆட்சியில் தான். அதன் பிறகு ஆட்சி அமைத்த திமுக அரசும் எதுவும் செய்யவில்லை. மத்திய அரசும் எதுவும் செய்யவில்லை.

ஆனைமலை நல்லாறு திட்டத்தை நடைமுறை படுத்தியது எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான். கேரளா முதல்வர் பினராய் விஜயனுடன் எடப்பாடியார் பேசிய நிலையில், நானும், பொள்ளாச்சி ஜெயராமனும் நேரில் சென்று பார்த்து திட்டத்தை செயல்படுத்த கூறினோம். திமுக அந்த திட்டத்தை கைவிட்டது.

பாஜக கட்சி வாட்ஸ்அப், யூ டூயூப்களில் மட்டுமே அரசியல் செய்து வருகிறது. மக்களவை தேர்தலில் சிங்கை ராமச்சந்திரன் 100% சதவிதம் வெற்றி பெறுவார். குறிப்பாக கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெறுவார்கள்” எனத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது கோவை மாநகர் மாவட்ட செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ஜுனன், கிணத்துகடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News