கோவை மண்டல போக்குவரத்துத்துறை ஆணையரிடம் ரூ.28 லட்சம் பறிமுதல்
கோவை போக்குவரத்துத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டல வட்டார போக்குவரத்து இணை ஆணையராக இருப்பவர் உமாசக்தி. இவர் இம்மாவட்டங்களைச் சேர்ந்த பேருந்து உரிமையாளர்கள், சுங்கச்சாவடி அதிகாரிகள் உட்பட பலரிடம் மாதந்தோறும் லஞ்சம் வசூலித்து வந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து கோவை காவல்துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் மாதாந்திர லஞ்சப் பணத்தை வசூலித்த இணை ஆணையர் உமாசக்தி, கோவை சவுரிபாளையம் பகுதியில் தன் காரில் சென்றுகொண்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள், காரை தடுத்து நிறுத்தி, சோதனை மேற்கொண்டனர். இதனால் உமாசக்தி கடும் அதிர்ச்சி அடைந்தார். சோதனையின்போது காரில் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த லஞ்சப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, உமாசக்தியையும் அவருக்கு உதவிகரமாக செயல்பட்ட ஓய்வுபெற்ற காவலர் செல்வராஜ் என்பவரையும் கைது செய்தனர்.