கோவையில் கனமழை - வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்
நேற்றிரவு முதல் கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோவை நகர் முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் ராட்சத குழாய் மூலம் மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.;
கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், கோவையில் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் திடீரென பலத்த மழை பெய்தது. இதில் கோவையின் முக்கிய நகரான காந்திபுரம், 100 அடி ரோடு, அவிநாசி ரோடு, சிங்கநல்லூர், பூ மார்க்கெட், புரூப் அண்ட் சாலை, கிக்கானி பள்ளி போன்ற பகுதிகளில் பாலங்களின் அடியில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
இதில் கோவை புரூக்பாண்ட் சாலை அருகே உள்ள மேம்பாலத்தின் அடியில் ஒரு வாகனம் மழை நீரில் சிக்கியது. தகவலறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் ராட்சத குழாய்கள் மூலம் மழைநீரை அப்புறப்படுத்தி வாகனத்தை மீட்டனர். அவினாசி சாலை மேம்பாலத்திற்கு கீழேயும் மழை நீர் தேங்கியதால், போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.
கோவையில் திடீரென பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் மிகவும் குளுமையாக காட்சியளிக்கின்றது. மேலும் 5 நாட்கள் தொடர் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைககளை மேற் கொண்டு வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர் கு ராசாமணி நேற்று நள்ளிரவில் வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய இடங்களை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.