அதிமுக - பாஜக கூட்டணி தேர்தல் வரை நீடிக்குமா என்பது கேள்விகுறி : ஜவஹிருல்லா
அதிமுக - பாஜக கூட்டணி தேர்தல் வரை நீடிக்குமா என்பதே கேள்விகுறி என கோவையில் ஜவஹிருல்லா பேட்டியின் போது கூறினார்.
கோவை உக்கடம் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக முதலமைச்சர் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பொங்கல் பரிசு அறிவித்து இருப்பது அப்பட்டமான விதிமுறை மீறல் எனவும், இது சட்டமன்ற தேர்தலையொட்டிய லஞ்ச அறிவிப்பு எனவும் தெரிவித்தார். மோடி அரசு கார்ப்பரேடுகளுக்கான அரசாக உள்ளது எனவும், கேஸ் விலை உயர்வை கண்டித்து மமக போராட்டம் நடத்தும் எனவும் அவர் கூறினார்.
அதிமுக கூட்டணியில் மிகப்பெரிய குழப்பங்கள் உள்ளன எனவும், அதிமுக - பாஜக கூட்டணி தேர்தல் வரை நீடிக்குமா என்பதே கேள்விகுறி எனவும் அவர் தெரிவித்தார். திமுக கூட்டணி ஒற்றுமையாக உள்ளது எனவும், திமுக கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். கொள்ளையடித்த பணத்தில் 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள் என்ற பாஜக துணை தலைவர் அண்ணாமலை கருத்து குறித்த கேள்விக்கு, அக்கூட்டணியில் உள்ளவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் எனத் தெரிவித்தார். மேலும் இரண்டு ஆயிரத்து 500 ரூபாயை பெற்றுக் கொண்டு அதிமுகவிற்குள் வாக்களித்தால் மேலும் 5 ஆண்டுகள் அடிமை ஆட்சியின் கீழ் உரிமைகளை இழந்து வாழ நேரிடும் என அவர் கூறினார்.