இந்திய பொருளாதாரம் 2021 ஆம் ஆண்டில் மீண்டும் வளர்ச்சி அடையும் - துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு நம்பிக்கை

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் 41-வது பட்டமளிப்பு விழாவில் 1,385 மாணவர்களுக்கு பட்டங்களை வெங்கையா நாயுடு வழங்கினார்.

Update: 2020-12-17 12:30 GMT

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் 41-வது பட்டமளிப்பு விழா பல்கலை கழக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வேளாண்மை துறை அமைச்சர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பட்டமளிப்பு நிகழ்வில் மொத்தம் 1,385 மாணவர்களுக்கு பட்டங்களை வெங்கையா நாயுடு வழங்கினார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது, "வேளாண்மை பொருளாதாரம் சார்ந்த்து மட்டுமல்ல. நமது கலாச்சாரம் சார்ந்த்தும் கூட. மக்கள்தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வேளாண்மையை நம்பியுள்ளனர். வேளாண்மை கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு. விவசாயத்தை லாபகரமான, உற்பத்தித்திறன் மிக்கதாக மாற்றுவது அவசியம். கோவிட் 19 தொற்றுநோய் பரவல் ஏற்பட்டு இருந்தாலும், இந்திய பொருளாதாரம் 2021 ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதத்துடன் மீண்டும் முன்னேறும் என நம்புகிறோம்.

தொற்று காலத்தில் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்ட நிலையில், விவசாயம் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு பொருளாதார வளர்ச்சியை உருவாக்கியது. கடந்த ஆண்டை விட 59 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு விவசாயம் அதிகரித்துள்ளது. கொரொனா நெருக்கடி காலத்திலும் உணவு தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது. கடினமான காலத்திலும் அர்ப்பணிப்பைக் காட்டிய விவசாயிகளுக்கு நன்றி. நீர்ப்பாசன ஆதாரங்கள் மாசுபடுவதும் கவலைக்குரியது. குறிப்பாக தமிழகம் போன்ற நீர் பற்றாக்குறை உள்ள மாநிலத்தில், வறட்சியைத் தாங்கும் மரபணு வகைகளையும் நீர் சேமிப்பு தொழில்நுட்பங்களையும் உருவாக்க இனப்பெருக்கம் செய்ய வேண்டும்.

2019 ம் ஆண்டிற்கான நீர் மேலாண்மைக்கான சிறந்த மாநில விருதை ஜல் சக்தி அமைச்சகத்திலிருந்து தமிழகம் பெற்று இருப்பது பாராட்டுகுரியது. விவசாயத்தில் உற்பத்தியை அதிகரித்து, அதனுடைய செலவினை குறைக்க வேண்டும். இது சாத்தியமான ஒன்று. தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். அதற்கு வேளாண்மை பல்கலைக்கழகங்கள் உறுதுனையாக இருக்கும் என நம்புகிறேன். மத்திய அரசு விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளன. அதன் வாயிலாக 72 % விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். விவசாயிகளின் பிரச்சனையில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். எல்லா துறைகளும் விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகள் அவர்களுக்காக மட்டும் உழைக்கவில்லை. நாட்டு மக்களுக்காக உழைக்ககின்றனர். இதை மதிக்கும் வகையில் அவர்கள் மீது எல்லா துறையினரும் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் நூற்றுக்கணக்கான உணவுகள் இருக்கின்றது. தமிழ்நாட்டில் விதவிதமான உணவு வகைகள் இருக்கின்றது.

வத்த குழம்பு, மோர் குழம்பு போன்ற உணவு வகைகள் நமக்கானது. பர்க்கர், பீட்சா போன்றவை நம்முடைய கால நிலைக்கு ஏற்ற உணவு வகை கிடையாது. கூகுள் நமக்கு முக்கியம்தான். ஆசிரியர்களுக்கு மாற்றாக கூகுள் இருக்க முடியாது. ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அனைவரும் பசுமையான உலகை உருவாக்குவோம்" எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News