அதிமுகவை வழிநடத்த சரியான ஆளுமை இல்லை :திருமாவளவன்
அதிமுகவை வழிநடத்த சரியான ஆளுமை இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
அதிமுகவை வழிநடத்த சரியான ஆளுமை இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை மேயர், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர், நகராட்சி துணைத் தலைவர்களின் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:, திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியில் துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணை தலைவர் பதவிகளை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடலூரில் துணை மேயர் பதவிக்கு வழக்கறிஞர் தாமரைச்செல்வன் போட்டியிடுகிறார். அனைத்து இடங்களிலும் கூட்டணி கட்சிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் துணை நிற்க வேண்டும்.சென்னை உள்ளிட்ட ஒன்பது இடங்களில் துணை மேயருக்கு எழுதிக் கொடுத்தோம் அதில் ஒன்று கிடைத்துள்ளது. மேலும் மாநகராட்சி மேயர் பதவி ஒன்று கேட்டு இருந்தோம், கேட்டது கிடைக்கவில்லை என்றாலும் ஒதுக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம்.
அதிமுக வாக்கு வங்கி சரிந்து விட்டது என்று சொல்ல முடியாது. அதை வழி நடத்த வலிமையான ஆளுமை இல்லை. ஐந்தாண்டு காலம் ஆட்சியை தக்க வைப்பதற்காக பாஜகவை தோளில் சுமந்து வந்தனர். இதனால் அதிமுக மீது வைத்திருந்த மதிப்பு சரிந்து விட்டது. சசிகலா அதிமுகவுடன் இணைவது தனிப்பட்ட விருப்பம் அதில் நாம் தலையிட முடியாது.
பாஜக தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று சொல்லும் அண்ணாமலை அவர்களுக்கு 1,2 கூட ஒழுங்காக படிக்கவில்லை என்று தான் தெரிகிறது. பாஜக மூன்றாவது இடம் என்பது ஒரு மாயை, பல இடங்களில் டெபாசிட் கூட பெறவில்லை அதனை மூடி மறைப்பதற்காக ஏதோ ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.உக்ரைனில் சிக்கிக் கொண்டிருக்கும் மாணவர்களை உடனடியாக தாயகம் திரும்புவதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.