கொரோனா தடுப்பு பணிகளுக்காக சன் டைரக்ட் டி.டி.எச் உதவி.. என்ன தெரியுமா?
கொரோனா தடுப்பு பணிக்காக சன் டைரக்ஸ் டிடிஎச் 50 ஆக்சிஜன் செரிவூட்டும் கருவிகளை தமிழக அரசிடம் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்க்கொள்ள தனியார் நிறுவனங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வேண்டுகோளை ஏற்று சாமானியர் முதல் தொழிலதிபர்கள் வரை தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கி வருகின்றனர்.
அதன்படி சன் டி.வி. குழும தலைவர் கலாநிதிமாறன் ஏற்கனவே முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 கோடி ரூபாய் வழங்கினார். இந்நிலையில் அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க உதவும் வகையில் சன் டி.வி. குழுமத்தின் ஒரு அங்கமான சன் டைரக்ட் டி.டி.எச் சார்பில் 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம், சன் டைரக்ட் டி.டி.எச் மேலாண்மை இயக்குனர் சுவாமிநாதன் ஆக்சிஜன் செறிவூட்டிகளை நேரில் வழங்கினார்.