தாம்பரத்தில் மாநகர புதிய காவல் ஆணையர் அலுவலகம்: காணொலி மூலம் முதல்வர் திறப்பு
புறநகர் பகுதிகளில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன அதை முறையாக ஆராய்ந்து மக்களின் தேவை, நலனை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்
சென்னை சோழிங்கநல்லூரில் தாம்பரம் மாநகர புதிய காவல் ஆணையரகத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணோலி வாயிலாக திறந்து வைத்தார். உடன் அமைச்சர்கள், தமிழ்நாடு காவல்துறை ஆணையர் சைலேந்திர பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிதாக தொடங்கப்பட்ட காவல் ஆணையரகத்தின் காவல் ஆணையராக ரவி முதல்வர் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டார்.
பின்னர் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: பொது மக்களுக்கு காவல் பணியாளர்கள் விரைவில் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த ஆணையகம் தொடங்கப்பட்டுள்ளது. நாங்கள் சிறப்பான காவல் பணியினை செய்து, சட்டம் ஒழுங்கை சீரமைத்து, குற்றங்களை தடுத்து மற்றும் பெண்கள், குழந்தைகள், பெரியவர்களுக்கு எதிராக நடைபெறுகின்றன அனைத்து குற்றங்களையும் தடுத்து பொது மக்களிடைம் நற்பெயரை பெறுவோம்.
காவலர் நமது சேவகர் என்ற நிலமையை உருவாக்கவே முதல்வர் இந்த ஆணையரகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த நோக்கத்தை நிறைவேற்ற நாங்கள் கடினமாக உழைப்போம்.20 தாலுக்கா காவல் நிலையங்களையும் அனைத்து மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையங்கள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட சிறப்பு பிரிவுகளுடன் செயல்படுவோம். புறநகர் பகுதிகளில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன அதை முறையாக ஆராய்ந்து மக்களின் தேவை மற்றும் நலனை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.