பெண் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை; 10ம் வகுப்பு வரை நீட்டிக்க அரசு பரிசீலனை
கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் திட்டத்தை 10ம் வகுப்பு வரை நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது.;
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வில்லை. இதனால், ஆன்லைன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
கிராமத்தில் உள்ள பெண் குழந்தைகள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊக்கத்தொகை 3 முதல் ஆறாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 3 முதல் 5 வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளை சார்ந்த மாணவியருக்கு, ஆண்டுக்கு தலா ரூ 500, 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு ஆண்டுக்கு தலா ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் திட்டத்தை 10 வகுப்பு வரை நீட்டிக்க தமிழக அரசு பரிசீலனை செய்துள்ளது.