ஹரியானாவில் சிக்கிய காஞ்சி ரவுடி: விமானத்தில் அழைத்து வந்த போலீசார்
காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடியை ஹரியானாவில் துப்பாக்கி முனையில் மடக்கிய போலீசார், விமானத்தில் சென்னை அழைத்து வந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்ததால், அவர்கள் ஒடுக்க, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரை, காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை கலக்கி வந்த பிரபல ரவுடி படப்பை குணா, தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மற்றொரு பிரபல ரவுடி பொய்யாகுளம் தியாகு என்கிற தியாகராஜன்(33) மீது 11 கொலைகள்,15 கொலை முயற்சிகள் உட்பட மொத்தம் 63 வழக்குகள் உள்ளன. இவரும் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார், தியாகராஜனை தீவிரமாக தேடி வந்தனர். அவர், அரியானா மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அரியான மாநிலத்திற்கு சென்ற தனிப்படை போலீசார், தியாகராஜனின் பிடிக்க முற்பட்டபோது அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அவரை, தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். கைதான தியாகராஜனை அரியானாவில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு சென்னை அழைத்து வந்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொள்வதாக காஞ்சிபுரம் அழைத்து செல்லப்பட்டார்.