நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

சட்டபேரவைக் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக திங்களன்று தீர்மானம் நிறைவேற்றப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-12 01:45 GMT

சென்னை பெரும்பாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே, நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்த திமுக, தேர்தல் வாக்குறுதியில் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்திருந்தது. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்புக்கு பிறகு, பல்வேறு அரசியல் தரப்பினரும் நீட் தேர்வு தொடர்பான திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் சென்னை பெரும்பாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, சனிக்கிழமையன்று ஆய்வு செய்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு விரும்பாத, முதல்வர் மனதுக்கு ஒப்புதல் இல்லாத நிலையிலேயே நீட் தேர்வு, ஞாயிறு அன்று நடைபெறுகிறது.

தமிழக சட்டப்பேரவை நடப்பு கூட்டத் தொடரின் இறுதி நாளான செப்டம்பர் 13ம் தேதி, நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளது.

நீட் தேர்வில் பங்கேற்க வருபவர்களின் பழைய கெடுபிடி எல்லாம் இருக்காது. ஞாயிறு அன்று, தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடக்க உள்ளன. இதன் மூலம், 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

Tags:    

Similar News