தமிகழத்தில் கொரோனா தொற்றால் 8,912 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை
தமிகழத்தில் கொரோனா தொற்றால் 8,912 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.;
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைந்துள்ள கோவிட் சிகிச்சை மையத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தாமோ அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் மொத்தமாக 1.91 லட்சம் படுக்கைகள் உள்ளது. ஆனால் மருத்துமனையில் இதுவரை 8912 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர் என்றார்.
நந்தம்பாக்கம் கோவிட் சிகிச்சை மையத்தில் 950 படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளது. இவற்றில் 350 படுக்கைகள் முன்களப்பணியாளர்களான அரசு அலுவலர்கள், காவல் துறையினற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
வீட்டு தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க 1535 களப்பணியாளர்கள் சென்னை மாநகராட்சி சார்பில் கோவிட் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
மேலும்,இரண்டு தவணை செலுத்தி கொண்டவர்கள் இறப்பின் நிலைக்கு செல்லவில்லை. தடுப்பூசி செலுத்த கொள்ளாதவர்கள் இருக்கக்கூடிய சூழல் உள்ளது என்றும், உயிர் காக்கும் ஆயுதமாக செயல்படும் தடுப்பூசியை மக்கள் அனைவரும் உணர்ந்து தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
வரும் சனிக்கிழமை 19வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெற உள்ளது என்றும், சென்னையில் மட்டும் 37,991 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். குறைவான நபர்களே கோவிட் சிகிச்சை மையத்திற்கு வருகின்றனர். பெரும்பான்மையானோர் வீட்டு தனிமையில் உள்ளனர் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கோவிட் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் அளவில் குழந்தைகள் ஒருவர் கூட இல்லை என்றும், கொண்டாட்டங்களை தாண்டி உயிர் முக்கியம் எனவே கடற்கரைக்கு செல்வதை தவிர்த்து மக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார்.