ஒமிக்ரான் பாதிப்பு, பரவல் குறித்து சென்னையில் மத்தியக்குழு ஆய்வு
ஒமிக்ரான் பாதிப்பு, பரவல் குறித்து சென்னையில் மத்தியக்குழு இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டது.;
ஒமைக்ரான் பாதிப்புகள் குறித்தும், பரவல் குறித்தும் ஆய்வு செய்வதற்காக, மத்திய மருத்துவக் குழு வல்லுநர்கள், தமிழகம் வந்துள்ளனர். இக்குழுவினர், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள பொதுசுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இன்று, ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர், இன்று மாலை சென்னை விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசின் மருத்துவக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து கிண்டி கொரானோ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த குழுவினர் தமிழ்நாட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்து ஆய்வுகள் நடத்தவுள்ளனர். இதன் பின்னர் ஆய்வின் முடிவுகளை மத்திய சுகாதாரத்துறையிடம், இந்த குழு அறிக்கை அளிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.