சென்னை விமானநிலையத்தில் மூன்றில் ஒரு பங்காக குறைந்த பயணிகள் எண்ணிக்கை

சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக குறைந்துபோனது.

Update: 2022-01-15 13:13 GMT

சென்னை விமான நிலையம்.

பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறை மற்றும் கொரோனா வைரஸ்,ஒமிக்ரான் தொற்றுகளின் வேகமான பரவல் காரணமாக சென்னை உள்நாட்டு விமானநிலையம் பயணிகள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடியது.நேற்று ஒரே நாளில்  போதிய பயணிகள் இல்லாமல் 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பயணிகள் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக அதாவது 10 ஆயிரமாக குறைந்துவிட்டது.

சென்னையில் கொரோனா வைரஸ் 3 ஆம் அலை,ஒமிக்ரான் பரவல் விஸ்வரூபம் எடுத்து வேகமாக பரவுகிறது. இதனால் சென்னை உள்நாட்டு  விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வேகமாக குறையத்தொடங்கின.கடந்த மாதத்தில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்திலிருந்து 34 ஆயிரம் வரை இருந்த பயணிகள் எண்ணிக்கை கடந்த வாரம் 20 ஆயிரமாக குறைந்தது.பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால்,உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையும் 270 லிருந்து கடந்த வாரம் 206 ஆக குறைந்தது.தற்போது அது மேலும் குறைந்து 183 ஆகிவிட்டது.

இதற்கு முக்கிய காரணம் பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறை, கொரோனா வைரஸ் 3 ஆம் அலையின் வேகமானபரவல்,ஒமிக்ரான் தொற்று அதிகரிப்பு தான் காரணம் என்று விமானநிலைய அதிகாரிகள் கூறுகின்றனா். இந்தநிலையில் போதிய பயணிகள் இல்லாமல்,சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் நேற்று ஒரே நாளில் வருகை/புறப்பாடு என 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.சென்னைக்கு வரவேண்டிய பெங்களூா்,டில்லி,மும்பை,கொல்கத்தா,ஹைதராபாத்,கொச்சி,மதுரை,தூத்துக்குடி,புனே,விசாகப்பட்டிணம்,விஜயவாடா,ராஞ்சி உள்ளிட்ட 16 விமானங்கள், அதைப்போல் சென்னையிலிருந்து இந்த நகரங்களுக்கு செல்ல வேண்டிய 16 விமானங்கள் என மொத்தம் 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களிலும் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளன.இதனால் அடுத்து வரும் நாட்களில் மேலும் பல விமானங்கள் ரத்தாக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

விமானங்கள் ரத்தானால் பயணிகளுக்கு விமான கட்டணம் பணமாக திருப்பி அளிக்கப்படமாட்டாது. அதற்கு பதிலாக வருகின்ற மாா்ச் 31ம் தேதிக்குள் அந்த டிக்கட்டுகளை  பயன்படுத்திக்கொள்ளலாம். ஏற்கனவே முன்பதிவு செய்த நகரங்களுக்கு மட்டும் தான் பயணிக்க வேண்டும் என்பதல்ல.உள்நாட்டு விமான பயணங்கள் எந்த நகராக இருந்தாலும் பயணிக்கலாம் என்று விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனால் பயணிகள் தரப்பில் விமான நிறுவனங்களின் இந்த அறிவிப்பிற்கு கடும் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். விமானம் ரத்தானால்,விமான கட்டணத்தை விமான நிறுவனம் திருப்பி அளிக்க வேண்டும் என்று கூறுகின்றனா்.

Tags:    

Similar News