தென் மாவட்டங்களுக்கு விமான கட்டணங்கள் கடும் உயா்வு: பயணிகள் அவதி
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமானனங்களில் டிக்கெட் கட்டணங்கள் கடும் உயா்வால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.;
சென்னை விமான நிலையத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்ல காத்திருக்கும் பயணிகள்.
கிறிஸ்மஸ் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் பலா் கடைசி நேரத்தில் விமான பயணங்கள் மேற்கொள்கின்றனா்.
இதனால் சென்னையிலிருந்து தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம், கொச்சி செல்லும் விமானங்களில் இன்றும் நாளையும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு நாள் ஒன்றுக்கு 4 விமானங்களும், மதுரைக்கு 6 விமானங்களும், திருவனந்தபுரத்திற்கு 2 விமானங்களும், கொச்சிக்கு 2 இயக்கப்படுகின்றன. அனைத்து விமானங்களிலும் பெரும்பாலான சீட்கள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. ஒரு சில சீட்கள் மட்டுமே உள்ளன.
இதையடுத்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் இந்த விமானங்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு திடீரென அதிகரித்துள்ளது. சென்னையிலிருந்து தூத்தூக்குடிக்கு வழக்கமான டிக்கெட் கட்டணம் ரூ.3,500. ஆனால் இன்று 10,500 ம், கிறிஸ்மஸ்க்கு முந்தின நாள் 24 ஆம் தேதி பயணிக்க ரூ.12 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.
அதைப்போல் மதுரைக்கு வழக்கமான கட்டிணம் ரூ.3,500. ஆனால் அது ரூ.9,800 வரை அதிகரித்துள்ளது. மேலும் திருவனந்தபுரம் செல்ல சாதாரண நாட்களில் ரூ.4 ஆயிரம்.அது தற்போது ரூ.9 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதைப்போல் கொச்சிக்கு செல்ல வழக்கமான கட்டணம் ரூ.3,500.அது ரூ.9,500 வரை வசூலிக்கப்படுகிறது.
அதைப்போல் பலா் கிறிஸ்மஸ் பண்டிகையின் விடுமுறை நாட்களான சனி, ஞாயிறை சுற்றுலா தளமான கோவாவில் கொண்டாட செல்கின்றனா். இதையடுத்து சென்னையிலிருந்து கோவா செல்லும் விமானங்களிலும் கட்டணங்கள் இருமடங்காக உயா்ந்துள்ளது.
இதுபற்றி விமான நிறுவனங்கள் தரப்பில் கூறுகையில், நாங்கள் கட்டணங்களை உயா்த்தவில்லை. விமானங்களில் பல அடுக்கு கட்டணங்கள் உள்ளன. அதில் குறைந்த கட்டணம்,மீடியம் கட்டணம் டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவாகிவிட்டன. தற்போது உயா்ந்த கட்டணம் சீட்கள் மட்டுமே உள்ளன. அதுதான் பயணிகளுக்கு கட்ண உயா்வுபோல் தெரிகிறது.இது வழக்கமான நடைமுறை தான் என்று கூறுகின்றனா்.
ஆனால் பயணிகள் தரப்பிலோ,விமான நிறுவனங்கள் கூறுவது தவறான தகவல்.பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி,அனைத்து டிக்கெட்களையும் உயா் கட்டண டிக்கெட்களாக மாற்றியுள்ளனா்.தனியாா் ஆம்னி பஸ்கள் கட்டணத்தை உயா்த்துவதுபோல்,விமான நிறுவனங்களும் நடந்து கொள்கின்றன.தமிழக அரசு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியாா் பஸ்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கின்றன.அதைப்போல் விமானக்கட்டணம் உயா்வு குறித்து,மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனா்.