திமுக- காங்கிரஸ் கூட்டணி பேச்சில் சிக்கலா? அழகிரி பளிச் பேட்டி
உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து, திமுகவுடன் பேச்சு வார்த்தை தொடர்வதாக, காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி தொடர்பாக, திமுக - காங்கிரஸ் கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை சந்தித்த பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி அளித்த பேட்டி:
குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் உரிமை பறிக்கப்பட்டது குறித்து முதல்வரிடம் பேசினோம். தமிழகத்தின் உரிமைகளை கேட்டுப் பெறுவது குறித்து பேசினோம். உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரையில் அந்தந்த மாவட்டங்களில் அளவிலேயே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எங்கள் கட்சியினர் விரும்பும் இடங்களை தருவதாக, திமுக தலைமை கூறியுள்ளது.
ஒருசில மாவட்டங்களில், சுமூகமாக பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. இன்னும் சில மாவட்டங்களில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேயர்கள் மற்றும் தலைவர்கள் பதவி, மறைமுக தேர்தலை சார்ந்து இருப்பதால் அது குறித்து பின்னர் ஆலோசிக்கப்படும். விரைவில், காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.