கல்வி பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து திமுக எம்எல்ஏ ஹைகோர்ட்டில் வழக்கு
கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது
கல்வி பொது பட்டியல் மாற்றம் எதிர்த்து திமுக எம்எல்ஏ சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏவும், அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியுமான எழிலன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட காரணத்தாலேயே நீட்தேர்வுகள், புதிய தேசிய கல்விக் கொள்கை போன்ற சட்டங்கள் மத்திய அரசால் அமலுக்கு வந்துள்ளன என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை தற்காலிக தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்து, ஏற்கெனவே இதுபோல உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து அடுத்த மாதம் விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்டனர்.