பெற்றோர்களை இழந்து தவிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரண உதவி வேண்டும் ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள்
கொரோனா தொற்றால் இறந்த பெற்றோரின் வேலைவாய்ப்பினை அளவுகோலாக எடுத்துக்கொள்ளாமல், பெற்றோர்களை இழந்து தவிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரண உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தொற்றால் இறந்த பெற்றோரின் வேலைவாய்ப்பினை அளவுகோலாக எடுத்துக்கொள்ளாமல், பெற்றோர்களை இழந்து தவிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரண உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர் அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
கொரோனா தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவற்றிருக்கும் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் சில நிவாரண உதவிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 29ம் தேதி அறிவித்தார். இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், சமூக நலத்துறையால் வெளியிடப்பட்டுள்ள ஆணையையும், அதன் வழிகாட்டு நெறிமுறைகளையும் பார்த்தால், 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை' என்ற பழமொழியைத்தான் பெரும்பாலானோருக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
கொரோனா காரணமாக பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்து 18 வயது முடிந்தவுடன் வட்டியோடு வழங்குதல், பட்டப்படிப்பு வரையில் கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்றிட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், சமூக நலத் துறையால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், தொற்று பாதிப்பால் இறந்த தாய், தந்தை இருவருமோ அல்லது இறந்த தாயோ அல்லது தந்தையோ அரசாங்கம் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்திருந்தால், அவர்களின் குழந்தைகள் நிவாரணத் தொகை பெற தகுதியானவர்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற வழிகாட்டி நெறிமுறைகள் பயனாளிகளை குறைப்பதற்கான வழி என்றே மக்கள் கருதுகிறார்கள். மேலும், குடும்பத்தில் உள்ள பொருளீட்டும் நபரை இழந்து தவிக்கும் குழந்தைகளிடையே பாகுபாட்டினை உருவாக்குவதாக அமையும். நிவாரண உதவி என்பது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு, அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஒன்று என்பதால், இதில், பெற்றோரின் வேலைவாய்ப்பினை ஓர் அளவுகோலாக எடுத்துக்கொள்வது பொருத்தமாக இருக்காது.
எனவே, முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, ஆதரவற்ற குழந்தைகளுக்கிடையே பாகுபாட்டினை ஏற்படுத்தாமல், பெற்றோர்களை இழந்து தவிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரண உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.