வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று முழு அடைப்புக்கு அழைப்பு
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை, விவசாயிகள் நடத்துகின்றனர். இதற்கு திமுக ஆதரவு அளித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும், இன்று நாடு தழுவிய அளவில் முழு அடைப்புக்கு, விவசாய சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளன.
'சம்யுக்தா கிசான் மோர்ச்சா' என்ற விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ள இப்போராட்டத்திற்கு, திமுக உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகம், ஆந்திரா, கேரளாவில், போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், வியாபாரிகளிடம், இப்போராட்டத்திற்கு விவசாயிகள் ஆதரவு கோரியுள்ளனர்.
ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெறலாம் என்பதால், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்திலும், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடைபெறும் என்று, அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளதால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.