117 ஆண்டுகள் பழையான பள்ளிக்கு ரூ.2.75 லட்சம் செலவில் மேஜை, நாற்காலிகள் அளிப்பு
திருவொற்றியூர் நெடுஞ்சாலை பெரியார் நகர் பகுதியில் மெட்ராஸ் தமிழ் மிஷன் தொடக்கப்பள்ளி 1905-ம் ஆண்டு தொடங்கப்பட்டது
சென்னை திருவொற்றியூரில் 117 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தொடக்கப் பள்ளிக்கு ரூ. 2.75 லட்சம் செலவில் சாய்தள மேஜை, நாற்காலிகளை இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வியாழக்கிழமை வழங்கினர்.
சென்னை மாநகரத்தின் ஒட்டிய கிராமமாக இருத்த முக்கிய ஊர்களில் திருவொற்றியூரும் ஒன்றாகும். இங்கு தற்போது திருவொற்றியூர் நெடுஞ்சாலை பெரியார் நகர் பகுதியில் மெட்ராஸ் தமிழ் மிஷன் தொடக்கப்பள்ளி 1905-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தன்னார்வ அறங்காவலர் குழுவால் நடத்தப்பட்டு வந்த இப்பள்ளி பின்னர் அரசு உதவி பெறும் பள்ளியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அறங்காவலர்கள் பலரும் காலமானதையடுத்து இப்பள்ளியின் நிர்வாகம் சென்னை உயர்நீதி மன்றத்தின் ஆளுகையில் உள்ளது.
தற்போது 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில் இப்பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இப்பள்ளியில் பயின்று தற்போது பல்வேறு உயர் பணிகளில் ஈடுபட்டு வரும் முன்னாள் மாணவர்கள் சிலர் முன் வந்தனர்.
இதனையடுத்து ரூ. 2.75 லட்சம் செலவிலான மாணவர்கள் அமர்வதற்கான சாய்தள மேஜை, ஆசிரியர்களுக்கான நாற்காலிகள் உள்ளிட்டவைகளை வியாழக்கிழமை வழங்கினர். அப்போது தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்களை முன்னாள் மாணவர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் இன்பநாதன், தலைமை ஆசிரியை கே.கஸ்தூரி, முன்னாள் மாணவர்கள் வழக்குரைஞர் வி.எஸ்.ரவி, சி.கோபால், ஆர்.தங்கவேலு, ஜெ. மும்மூர்த்தி, எஸ் கருணாகரன், எஸ் சரவணன்,ஜெ எழில்வேலன், எம் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவொற்றியூரின் சிறப்புகள்: சென்னையின் ஒருபகுதி. 'உயர்நீதி மன்றப்' பகுதியிலிருந்து திருவொற்றியூருக்கு நகரப்பேருந்து செல்கிறது, இப்பேருந்தில் ஏறி, காலடிப்பேட்டையை அடுத்து, 'தேரடி நிறுத்தத்தில்' (தேரடி நிறுத்தம்) இறங்கினால் எதிரில் வீதிகோடியில் கோயிலைக் காணலாம். ஆதிபுரி என்றழைக்கப்படும் தலம். சுந்தரர், சங்கிலியாரை மணந்துகொண்ட சிறப்புடையது. கலியநாயனாரின் அவதாரத் தலம். தியாகேசப்பெருமான் வீற்றிருந்தருளும் தெய்விகச் சிறப்பு வாய்ந்த தலம். ஐயடிகள் காடவர்கோன், முசுகுந்தன் முதலியோர் வழிபட்டது.
முற்றத்துறந்த பட்டினத்து அடிகள் முத்தி பெற்ற தலம். வடலூர் வள்ளற்பெருமானின் வாழ்வொடு இயைந்த பதி. மிகப்பெரிய கோயில். கோயிலின்முன் பதினாறுகால் மண்டபம் உள்ளது. பக்கத்தில் பெரிய தீர்த்தக்குளம் நீராழி மண்டபத்துடன் உள்ளது. இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. பழமையான கோபுரம் உள்ளே நுழைந்தால் செப்புக்கவசமிட்ட கொடி மரம், பலிபீடம், நந்தி உள்ளன. வலமாகவரும்போது சூரியன் சந்நிதி, அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர் சங்கிலியாருடன், உயரமான சஹஸ்ரலிங்கம், ஏகாம்பரர், இரமநாதர், ஜகந்நாதர், அமிர்தகண்டீஸ்வரர், யாகசாலை, குழந்தை ஈஸ்வரர், சுப்பிரமணியர், மதிற்சுவரை ஒட்டினாற்போல, இருபத்தேழு நட்சத்திரங்களும் இப்பெருமானை வழிபட்ட ஐதீகத்தை விளக்கும் வகையில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ள நட்சத்திர சிவலிங்கங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன.