இருசக்கர வாகனங்களுக்கு தடையால் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக பணிகள் பாதிப்பு?
-சென்னை சிறப்பு செய்தியாளர் முகவை க. சிவகுமார்.;
தளர்வுகளற்ற பொதுமுடக்கம் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் அத்தியாவசியப் பணிகளுக்கு செல்லும் பணியாளர்களுக்கும் கூட இருசக்கர வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதி-இறக்குமதி சார்ந்த பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீநுண்மி தீவிரமாக பரவி வருவதைத் தொடர்ந்து தமிழகத்தில் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மே 10-ம் தேதி முதல் 24 ம் தேதி வரை சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் செவ்வாய்க்கிழமை முதல் தளர்வுகளற்ற பொது முடக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பணியாளர்களை அழைத்துச்செல்ல பேருந்துகள் நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி எனவும், இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் செவ்வாய்க்கிழமை சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி அதானி உள்ளிட்ட துறைமுகங்கள் வழியாக நடைபெற்றுவரும் ஏற்றுமதி-இறக்குமதி பணிகளில் ஈடுபட்டுவரும் பல்வேறு துறைகளை சார்ந்த பணியாளர்கள் வேலைக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து துறைமுகங்கள், சுங்கத்துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்களிலும் அலுவலர்கள், பணியாளர்கள் வருகை செவ்வாய்க்கிழமை வெகுவாக குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதே நிலை தொடர்ந்து நீடித்தால் சுங்கத்துறை அலுவலர்கள் மற்றும் சுங்கத்துறை சார்ந்த ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த அனைத்து தொழில்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இருசக்கர வாகனங்களை அனுமதிப்பது அவசியத் தேவை:
இதுகுறித்து சென்னை சுங்க தரகர் சங்க தலைவர் எஸ். நடராஜன், செயலாளர் கே. என். சேகர் ஆகியோர் கூறியது,
நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் தடையற்ற வகையில் நடைபெறுவதற்கு மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மே 10 ம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபோது தமிழக அரசு அரசு ஆணை எண் 371 மூலம் ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த துறைமுகங்கள், சுங்கத்துறை அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள், சரக்குப் பெட்டக முனையங்கள், சரக்குப் பெட்டக நிலையங்கள்,போக்குவரத்து நிறுவனங்கள், ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகர்களுக்கு பல்வேறு சான்றிதழ்களை அளிக்கும் மத்திய அரசு நிறுவனங்கள், இவைகளைச் சார்ந்த ஏஜென்சிகள் உள்ளிட்டவைகளில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் அளிக்கும் அடையாள அட்டையை பயன்படுத்திக்கொண்டு இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் தளர்வு இல்லாத பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து புதிய விதிமுறைகளின் படி இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி எக்காரணத்தைக் கொண்டும் வழங்கப்படமாட்டாது. இதனை மீறி வரும் நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் போதுமான பணியாளர்கள் வேலைக்கு வர முடியாத அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதி இறக்குமதி பணிகள் என்பது வெறும் அலுவலகத்தில் மட்டுமே அலுவல்கள் இருக்கும் என்ற நிலை இல்லை. ஒரு சிலரைத் தவிர அனைவருக்குமே கார்களில் வந்து செல்வதற்கான வசதிகள் இல்லை. பல்வேறு பணிகளுக்காக துறைமுகங்களின் உள்ளே செல்ல வேண்டும் . சரக்கு பெட்டகங்கள் நிலையங்களுக்குச் சென்று சுங்கத்துறை ஆவண பரிசோதனைகளை முடித்து சரக்குகளை ஏற்றி இறக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் . ஊழியர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒரே பகுதியிலோ வசிப்பிடமாகக் கொள்ளவில்லை. எனவே கார்கள் மூலம் அழைத்து வருவது திரும்பவும் வீட்டிற்கே கொண்டு விடுவது என்பது நடைமுறைக்கு இயலாத காரியம். கண்டெய்னர் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள லாரி ஓட்டுநர்கள், உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் ஏற்றுமதி இறக்குமதிக்கான ஆவணங்களை அந்தந்த இடங்களுக்கு கொண்டு சென்று ஒப்படைக்க வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்கள் போதுமான அளவில் பணிக்கு வந்தாக வேண்டும்.
இத்தகைய சூழ்நிலையில் இருசக்கர வாகன பயன்பாடு என்பது அவசியமானது மட்டுமல்ல தவிர்க்கவும் முடியாது. எனவே இதுகுறித்து தமிழக அரசு உரிய ஆலோசனைகளை மேற்கொண்டு உடனடியாக இத்துறை சார்ந்த பணியாளர்களுக்கு தடையின்றி செல்வதற்கு உரிய அனுமதியை வழங்க வேண்டும். இதற்கு நாங்கள் எந்தவிதமான உத்தரவாதத்தையும் அளிப்பதற்கு தயாராகவே உள்ளோம் என்றனர்.
அவசியத் தேவையை புரிந்து கொள்ள வேண்டும்:
இப்பிரச்சனை குறித்து தமிழ் வர்த்தகர் சங்க தலைவர் சோழ நாச்சியார் ராஜசேகரன் கூறியது,
தொற்று பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை . அதேநேரம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே பொது முடக்க காலத்திலும் தடையற்ற சரக்கு வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளில் தொடர்புடைய நிறுவனங்கள், ஆலைகள் அனைத்தையும் ஒரே பிரிவில் கொண்டுவந்துவிட முடியாது. சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். நிலைமையை புரிந்து கொண்டு அதிகாரிகள் அரசுக்கு உரிய ஆலோசனைகளை அளிக்க வேண்டும். அவசரகதியில் முடிவுகளை எடுப்பதால் தேவையற்ற பாதிப்புகள் வேறுவகையில் ஏற்படக்கூடும் என்பதை அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே தேவையான பணியாளர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்கள் அனைத்து வகை வாகனங்களிலும் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது முடக்க காலத்தின்போது பொதுமக்கள் அதிகம் நடமாடும் அதை தடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் அரசு செயல்பட்டாலும் இப்பிரச்சனையில் உள்ள சிக்கல்களை புரிந்துகொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . ஏனென்றால் பொது முடக்கம் என்பது ஓரிரு நாட்களில் முடிவுக்கு கொண்டு வந்து விடக் கூடியது அல்ல என்பதையும் அரசு உணர வேண்டும் என்றார் ராஜசேகரன்.
பொறுப்பின்மைதான் காரணம்:
இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகள் கூறியது,
முதலில் மின்னனு பதிவு மட்டும் செய்து கொள்வதன் மூலம் இருசக்கர வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதனை தவறாக பயன்படுத்திக் கொண்டு பெரும்பாலானோர் மின்னணு பதிவு மூலம் அனுமதி அட்டைகளை வாகனங்களில் ஒட்டிக்கொண்டு வருகின்றனர். இவர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. பொதுமக்கள் நடமாட்டமும் தொடர்ந்து அதிகரித்தே வந்தது. வீட்டிலிருந்தே பணிகளை தொடர அறிவுறுத்தப்பட்ட போதும் நடவடிக்கை எடுப்பதில் மென்மையான போக்கினை பயன்படுத்திக்கொண்டு ஏராளமானோர் பொறுப்பற்ற முறையில் இருசக்கர வாகனங்களில் செல்வதால்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றனர்.
இதுகுறித்து துறைமுகங்களின் வட்டாரத்தில் கேட்டபோது, இப்பிரச்சனை குறித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டஉள்ளதாகவும், விரைவில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவது ஆகும் தெரிவித்தனர்.