கல்வியை மாநிலங்களுக்கான பட்டியலில் சேர்க்க திருமாவளவன் வலியுறுத்தல்
கல்வியை மாநிலங்களுக்கான அதிகார பட்டியலில் சேர்க்க திமுக வலியுறுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை
கல்வியை ஒத்திசைவு பட்டியலில் இருந்து எடுத்து மாநிலங்களுக்கான அதிகார பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசை திமுக வலியுறுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
காமராஜரின் 46வது நினைவு நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: கல்வியை ஒத்திசைவு பட்டியலில் இருந்து எடுத்து மாநிலங்களுக்கான அதிகார பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசை திமுக வலியுறுத்த வேண்டும். போராட்டம் என்பதே அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகத்தான். கொடி ஏற்ற விடாமல் போன சம்பவம் பற்றி 3 இடங்களில் போராட்டம் நடத்த திட்டமிட்டேன். சென்னையில் பெரிய அளவில் நடத்திய பிறகு முதலமைச்சரிடமிருந்து அழைப்பு வந்ததால் அதனால் மற்ற 2 இடங்களில் போராட்டத்தை ஒத்தி வைத்தேன்.
இந்நிலையில் நேற்று முதலமைச்சரை சந்தித்து எங்களுடைய பிரச்னைகளை கூறினோம். முதலமைச்சருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்ததால் மற்ற 2 இடங்களில் போராட்டம் நடத்தபோவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். ஒரு இடத்தில் நடந்த போராட்டத்திலேயே எங்களுடைய பிரச்சனை அரசின் கவனத்திற்கு சென்று நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் நம்பிக்கையளித்ததால் போராட்டத்தை கைவிட்டோம்.. மதுவிலக்கை தேசிய கொள்கையாக ஏற்க வேண்டும். அதற்கு இந்திய ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என விசிக சார்பாக கேட்கிறோம். தமிழக அரசும் மதுவிலக்கு கொள்கையை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.