மாடுகளைப் பராமரிப்பதில் அலட்சியம் : மாநகராட்சியைக்கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெரம்பூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பசு சிறை கூடத்தில் சினை பசு மாடு மிகவும் உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது;
சென்னை பெரம்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மாடுகளை முறையாக பராமரிக்காத மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் பாதிக்கபடுவதாகவும் கூறி, சென்னையில் மாடுகள் சுற்றி திரிந்தால் அதனை சிறை பிடிக்கவும் மாட்டு உரிமையாளர்களுக்கு ரூ. 1500 அபராதம் விதிக்கவும் மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து சாலையில் சுற்றி திரியும் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து அதனை மாநகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில் உள்ள பசு சிறை கூடத்தில் அடைத்து வந்தனர். சமீபத்தில் ஆலந்தூர் சாலையில் சுற்றி திரிந்த மாட்டை மாநகராட்சி ஊழியர்கள் பிடிக்கும் போது, அந்தமாட்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் பெரம்பூர் ஜமாலியா பகுதியில் மாநகராட்சி சார்பில் உள்ள பசு சிறை கூடத்தில் சினை பசு மாடு ஒன்று மிகவும் உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இது குறித்து மாட்டின் உரிமையாளர் பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தமிழ்நாடு கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் பசு கூடத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் தலைவர் வழக்கறிஞர் தங்கசாந்தகுமார் தலைமையில் நடந்த இந்த கண்டன ஆர்பாட்டத்தில் பெண்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மாநகராட்சி சார்பில் மாடுகள் சிறை பிடிக்க படுவதை கண்டித்தும் , முறையான நடவடிக்கை எடுக்கபடாததை கண்டித்தும் ஆர்பாட்டம் நடைபெற்றது.