இயக்குநர் ரஞ்சித்தின் அனைத்து முயற்சிக்கும் விசிக துணையாக இருக்கும் : திருமாவளவன்

மார்கழியில் மக்களிசை என்பது எதிர் பண்பாட்டு கலாசார புரட்சி என இயக்குனர் பா. ரஞ்சித் விளக்கமளித்தார்;

Update: 2022-01-02 03:30 GMT

நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை 2021 கலை விழாவின் இறுதி நிகழ்ச்சி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. 

பா.ரஞ்சித்தின் அனைத்து முயற்சிக்கும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி  துணையாக இருக்கும் என்றார் அக்கட்சியின்  தலைவர் திருமாவளவன்.

நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை 2021 கலை விழாவின் இறுதி நிகழ்ச்சி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. 

இதில் சிறப்பு விருந்தினர்களாக விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, திமுக செய்தி தொடர்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், திரைப்பட இயக்குனர்கள் பா. ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன், நடிகர் ஜான் விஜய் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் நாட்டுப்புற மற்றும் மக்களிசை கலைஞர்களுக்கு, மக்களிசை மாமணி எனும் சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர், மேலும் அவர்களுக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கப்பட்டது. ஒப்பாரி கலைஞர் ராமதாஸ், பறையிசை கலைஞர் பாப்பம்பட்டி முனுசாமி, முத்தையா, தோலிசை கருவிகளை தயாரிக்கும் கலைஞர் சேகர், கானா பாடகர் மாறன்,பாடகர் சுசிலா, தலித் சுப்பையா, கிடாக்குழி மாரியம்மாள்,பாக்கியம்மாள் மற்றும் முத்தம்மாள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

பின்னர் மேடையில் பேசிய திருமாவளவன், தமக்கு இந்த வாய்ப்பு அளித்த இயக்குனர் பா.ரஞ்சித்க்கு நெஞ்சார்ந்த நன்றி எனவும், திரைத்துறை உள்ளிட்ட பண்பாட்டு தளத்தில் சாதியாவாதிகள் ஆக்கிரமித்து இருந்தார்கள். ஆனால் இன்று தனது துணிவால் திரைத்துறையில் காய்களை பா.ரஞ்சித் நகர்த்தி வருவதாக கூறினார்.

எவராலும் கவனிக்கப்படாத கலைஞர்களை கவனித்து எங்கோ ஒரு மூலையில் இருக்கிற கலைஞர்களை அடையாளப்படுத்தி, தாங்கள் உயர்ந்தவர்கள் என கூறி கொள்பவர்கள் பாடுகிற இந்த மேடையில் மக்களிசை கலைஞர்களை அழைத்து வந்து மரியாதை செய்துள்ளதை நினைத்து பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார். மனிதன் உருவாக்கிய முதல் இசை கருவி பறை தான். அது தான் தவில், கோயில் மேளம் உள்ளிட்ட வடிங்களை பெற்றதாக கூறிய திருமாவளவன், இது ( counter culture)கவுண்டர் கலாச்சாரம் இல்லை (encounter culture) என்கவுண்டர் கலாச்சாரம்.

பெரிய பெரிய பண முதலைகள் உள்ள திரைதுறையில் அவர்களுக்கு ஏற்ற வகையில் படம் எடுக்க வேண்டிய சூழல் இருந்தது, ஆனால் அதை உடைத்தவர் பா.ரஞ்சித் எனவும் போர் குணத்துடன் இந்த காளத்தில் அவர் இருப்பதாகவும் கூறினார். மார்கழியில் மக்களிசை எனும் பா.ரஞ்சித்தின் இந்த முயற்சியை நெஞ்சார்ந்தபாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் .வட நாட்டவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த திரை துறையில் அண்ணா, எம் ஆர் ராதா, கருணாநிதி, எம் ஜி ஆர் போன்ற திராவிட கலைஞர்கள் திரைதுறையை பண்பாட்டு தளங்களை மிக நேர்த்தியாக கையாண்டார்கள் அது அவர்களுக்கு அரசியல் அதிகாரத்தை பெற்று தந்தது. பா.ரஞ்சித்தின் அனைத்து முயற்சிக்கும் விசிக துணையாக இருக்கும். விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என திருமாவளவன் கூறினார்.

முன்னதாக  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேசியதாவது, அடங்க மறு என சொல்லக்கூடியவை நமது கலைகள் அது நம்முடைய போராட்டங்களை, கண்ணீரை இரத்தத்தை, வியர்வை துளிகளை சொல்லக்கூடியவை. பா.ரஞ்சித் மற்றும் குழுவினருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் இதே வீச்சோடு இந்த மக்களிசை நிகழ்ச்சி நடைபெற வேண்டும்.பொதுவாக இந்த மாதத்தில் மியூசிக் அகாடமியில் யாராவது ஒருவர் அமைதியாக பாடி கொண்டிருப்பார். ஆனால், இப்போது இங்கு மேடையே அதிருது அது தான் நம்முடைய கலை என கனிமொழி கூறியபோது அங்கிருந்தவர்கள் உற்சாக முழக்கமிட்டனர்..

நாடாளுமன்ற உறுப்பினர் டி கே எஸ் இளங்கோவன் பேசுகையில், இது எதிர் கலாச்சாரம் இல்லை, நிஜ கலாச்சாரம் இது நம் தமிழனின் கலை. பொய்யாக நுழைந்த பண்பாட்டை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பா.ரஞ்சித்தை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

 திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பேசுகையில், மக்களிசை நிகழ்ச்சியை இயக்கமாக மாற்றுவது கடினம் அதை செய்யும் பா.ரஞ்சித்தை வாழ்த்துவதாகவும் அவர், இயக்குனர் மட்டுமல்ல சமூக செயற்பாட்டாளராகவும் உள்ளார் என  குறிப்பிட்டார்.இதையடுத்து இயக்குனர் பா. ரஞ்சித் பேசுகையில், மார்கழியில் மக்களிசை என்பது எதிர் பண்பாட்டு கலாசார புரட்சி என விளக்கமளித்தார்.

Tags:    

Similar News