செப்.26ல் மூன்றாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

வரும் ஞாயிற்றுக்கிழமை 20 ஆயிரம் இடங்களில் மூன்றாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம். அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-09-23 11:43 GMT

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

வரும் ஞாயிற்றுக்கிழமை 20 ஆயிரம் இடங்களில் மூன்றாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் சென்னை மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான "ஆனைப்புலி" மரத்தின் வரலாற்று குறிப்பேட்டை நாளை தமிழக அரசு திறந்து வைக்க உள்ளதாக கூறினார்.

மேலும் தமிழகத்தில் 9 லட்சத்து 47 ஆயிரத்து 284 பேர் இதுவரை மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பயனடைந்துள்ளனர் என்றும், நாளை சென்னை மருத்துவ கல்லூரி வளாகத்தில் மக்களை தேடி மருத்துவ மையத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் என்றும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் மக்களை தேடி மருத்துவ மையத்தை திறக்கப்படும் என்றார். அதேபோல் மருத்துவமனைக்கு வரும் 30 வயதை தாண்டியவர்களுக்கு நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களை கண்டறிவதற்கான சோதனை நடத்தும் திட்டத்தையும், காது கேளாதோர், பேச்சுத்திறனற்றோருக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான நவீன கருவிகளையும் முதல்வர் நாளை வழங்க உள்ளார்.

கடந்த 2 நாட்களாக தடுப்பூசி வராமல் இருந்தது என்றும் முதலமைச்சர் தடுப்பூசி கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியும், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்நிலையில் 5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது என்றும், 14 லட்சம் தடுப்பூசிகள் இன்று மாலை வரவுள்ளது என்றும் தெரிவித்தார். எனவே வரும் ஞாயிற்றுக்கிழமை மூன்றாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என்றும், சுமார் 20 ஆயிரம் மையங்கள் அமைத்து, 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார்.

அதுமட்டுமின்றி நீட் விவகாரத்தில் நிச்சயம் தமிழகத்திற்கு நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறிய அமைச்சர், வடகிழக்கு பருவமழை காலத்தில் டெங்கு நோய் வரும். கடந்த ஆண்டு 2410 நபர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டனர், தற்போது முன்னெச்சரிக்கை எடுத்து வருவதாக கூறினார். கடந்த ஆண்டு 26 ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யபட்டு இருந்தனர். இந்த ஆண்டு 76 ஆயிரம் நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு உள்ளோம். எனவே இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் பேசினார்.

மேலும் பருவமழைக்கு முன்னாள் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றும், இந்த ஆண்டு தற்போது வரை 2733 நபர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவித்தார். மருத்துவ பணியாளர்கள் நியமனத்தில் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அமைச்சர், கோவையை காட்டிலும், சென்னையில் 200க்கு கீழ் தான் தொற்று பாதிப்பு உள்ளது என்றும் சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு அவசியம் இருக்காது எனவும் கூறினார்.

Tags:    

Similar News