வரி ஏய்ப்பு செய்யும் எந்த நிறுவனமாக இருந்தாலும் குண்டர் சட்டம் பாயும்
வரி ஏய்ப்பு செய்யும் எந்த நிறுவனமாக இருந்தாலும் குண்டர் சட்டம்: வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை
சென்னை நந்தனத்தில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மேலும் கூறியதாவது: தமிழகத்தில் முக்கிய நகரங்களில் வணிக செய்யும் துணிக்கடைகளில் மாதாந்திர அறிக்கைகளை ஆய்வு செய்ததில் அவர்கள் வழியை சரிவர செலுத்தவில்லை என்பது தெரியவந்தது.
அவைகளை கண்டறிவதற்காக வணிகவரி ஆணையரின் மேற்பார்வையில், ஐந்து குழுக்களாக 260 வணிகவரித் துறை அதிகாரிகளால் 115 இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலான இடங்களில் இந்த ஆய்வு முடிவுற்ற நிலையில், இன்னும் சில இடங்களில் ஆய்வு நடத்த வேண்டியுள்ளது.
இந்த ஆய்வின் அடிப்படையில், வரி மறைக்கப்பட்டது, தவறாக உள்ளீட்டு வரி செலுத்தியது, வாடகை போன்ற சிலை சேவைகளுக்கு வரி செலுத்தாதது, பதிவு பெறாத இடங்களில் சரக்கு இருப்பு வைத்துள்ளது போன்ற குறைகள் கண்டறியப்பட்டுள்ளன. இது தொடர்பாக கண்டுபிடிக்கப்பட்ட குறைபாடுகள் மொத்தம் ரூ. 101 .49 கோடி ஆகும்.
சோதனை மேற்கொள்ளப்பட்ட 115 இடங்களில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, சுமார் ரூ. 101.49 கோடி.. நாளுக்கு நாள் வரி ஏய்ப்பு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. அதற்காக துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து கொண்டு இருக்கிறோம். சிறிது காலத்திற்குள் வரி ஏய்ப்பு செய்பவர்களை, கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு வரக்கூடிய வருவாயில் 87% வணிக வரியில் இருந்து தான் வருகிறது. வரி ஏய்ப்பு செய்யும் எந்த நிறுவனமாக இருந்தாலும் குண்டர் சட்டம் பாயும்.
தங்கள் துறைக்கு தற்போது வாங்கும் வாகனங்கள் அனைத்தும் RFID பொருத்தப்பட்ட வாகனம் தான் வாங்க வேண்டும். RFID பொருத்தப்பட்ட 100 வாகனங்கள் வாங்கப்படும். நீண்ட நாட்களாக வணிக வரித்துறையில் பணி புரியும் 55 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்களை இடம் மாற்றம் செய்யவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வரி ஏய்ப்பு என்பது கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்றது என்றார் அமைச்சர் பி. மூர்த்தி.