ரூ.1000 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்பு

ரூ 1000 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

Update: 2021-09-29 13:21 GMT

அமைச்சர் சேகர் பாபு

சென்னை கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 49 கிரவுண்ட் ரூ.300 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் ரூ.1000 கோடி மதிப்புள்ள நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள அமைச்சர் சேகர் பாபு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

கோயில் நிலங்கள் மற்றும் அதன் சொத்து விவரங்களை பொதுமக்கள் பார்க்கும் வகையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோவில் நிலங்களை மீட்பது, கோவிலுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு முறையாக வாடகை வசூலிப்பது, கோவில்களை சீரமைப்பது, புனரமைப்பது போன்ற நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்கும்பணி மேற்கொள்ளப்பட்டது. இன்றைய தினம் ஏகாம்பர நாதர் கோவிலுக்குச் சொந்தமான 49 கிரவுண்ட் நிலம் இந்து சமய அறநிலையத்துறையினரால் மீக்கப்பட்டதாக அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு;

தற்போது மீட்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்தின் தொன்மை மாறாமல் வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது பற்றி கட்டிட வல்லுநர்களிடம் ஆய்வு செய்ய ஒப்படைத்துள்ளோம். கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை குறித்த அறிக்கை வந்த பின்னர் இதனை அப்படியே பயன்படுத்துவதா அல்லது இடித்து வேறு புதிய கட்டிடம் கட்டுவதா என்று முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

98 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்ட இந்த இடத்தை குத்தகை தாரர்கள் மறைந்த பிறகு வாரிசுதாரர்கள் வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். அந்த வாடகையை அவர்கள் பெற்று வந்தனர். கோவிலுக்கு வாடகை செலுத்தவில்லை. 12 கோடிக்கு மேல் வாடகை நிலுவையில் உள்ளது.

இதை வசூலிக்கவும் வழக்கு தொடருவோம். இறை சொத்து இறைவனுக்கே என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு ஆக்கிரமிப்பு நிலங்களை தினசரியும் மீட்டு வருகிறோம். கடந்த நான்கு நாட்களில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இறுதிக்குள் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தோம் அந்த இலக்கு எட்டப்பட்டு விட்டது. இன்னும் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான 33 கிரவுண்ட் நிலம் அண்மையில் மீட்கப்பட்டது. இந்த இடத்தில் இயங்கி வந்த தனியார் பள்ளி, தற்போது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பெயரில் இயங்கி வருகிறது.

மேலும் அந்தப் பள்ளியை தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை நடத்தும் என இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.  சென்னை கீழ்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான 1,970 சதுர அடியை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டிருந்தன. இவற்றை பொக்லைன் இயந்திரத்தின் மூலம் நேற்று அகற்றப்பட்ட ரூ.5 கோடி மதிப்பு நிலம் மீட்கப்பட்டது.

இதேபோல், இந்து சமய அறநிலையத் துறையின் சொத்துகளை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் தாங்களாகவே வருகை தந்து அந்த நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

அறநிலையத் துறைக்கு சொந்தமான அனைத்து நிலங்களும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு கோயில்கள் வசம் கொண்டுவரப்படும். இதேபோல் சென்னை நகரின் பிரதான சாலையில் உள்ள மற்ற நிலங்களை திருக்கோயில் மூலம் சுவாதீனம் பெறப்பட்டு அதிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

Tags:    

Similar News