தமிழகத்துக்கு உடனே ஆக்சிஜன் தேவை - பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால் ஆக்சிஜன் தேவையை அதிகரிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
முதல்வரின் கடிதத்தில், தமிழகத்தின் தற்போதைய தினசரி ஆக்சிஜன் தேவை 440 மெட்ரிக் டன்னாக உள்ளது. இந்த தேவை வரும் இரண்டு வாரங்களில் அதிகரித்து 840 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவைப்படும். ஆனால் தேசிய ஆக்சிஜன் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கான ஒதுக்கீடு 220 மெட்ரிக் டன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கடந்த மே 1 மற்றும் 2 ஆம் தேதி அரசு அதிகாரிகள் தொழிற்சாலைகள் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் தமிழகத்துக்கு 476 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
இந்நிலையில் தாங்கள் தலையிட்டு தமிழகத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி தமிழகத்துக்கு உடனே 476 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 20 க்ரையோஜெனிக் கண்டெய்னர்களையும் அவற்றைக் கொண்டுவர ரயில் போக்குவரத்து வசதியையும் மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.' என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.