தி.நகர் முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரிய மனு: லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் தி.நகர் தொகுதி எம்எல்ஏ சத்திய நாராயணன் மீது வழக்குப் பதியக் கோரிய மனுவுக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-06-19 18:08 GMT

தி.நகர் எம்எல்ஏ

சென்னை தி.நகர் தொகுதியில் கடந்த முறை அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் சத்யா (எ) சத்தியநாராயணன், தொகுதி மேம்பாட்டு நிதியைச் செலவழித்ததில் முறைகேடு செய்துள்ளதாக ராயபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்தாக்‌ஷன் என்பவர், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.

அவரது புகார் மனுவில், தி.நகர் எம்எல்ஏ சத்திய நாராயணன், மேற்கு மாம்பலம் பகுதியில் அம்மா உள்விளையாட்டு அரங்கம் கட்ட 2016-17ம் ஆண்டில் 5 கட்டங்களாக நிதி ஒதுக்கி ஒரு கோடி ரூபாய் செலவு செய்ததில் முறைகேடு செய்ததாகவும்,

2018-19ம் நிதியாண்டில் மேற்கு மாம்பலம், காசி குளம் பகுதியில் கட்டிடமே கட்டாமல் ரூ.30 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக கணக்கு எழுதியது குறித்தும்,

2017-18ம் ஆண்டு எம்எல்ஏ நிதியில் சட்டத்திற்கும், அரசாணைக்கும் புறம்பாக ரூ.2 கோடி ரூபாய்க்கு வெறும் சாலை அமைக்கும் பணிகள் மட்டுமே செய்தார் என்று தெரிவித்திருந்தார்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், இந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா, மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அரவிந்தாக்ஷன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வருகிற ஜூன் 27ம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தார்.

Tags:    

Similar News