கலை இலக்கிய பெருமன்ற வைர விழா: போட்டியில் 3 பரிசுகள் வென்ற மாணவிக்கு பரிசு
நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி ஆக. 15-ஆம் தேதி இணையவழியில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன;
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 60ஆம் ஆண்டு நிறைவு வைர விழாவையொட்டி இணைய வழியில் நடைபெற்ற மாணவர்களுக்கான போட்டிகளில் மூன்று பரிசுகளை வென்ற மாணவிக்கு ஆர். நல்லகண்ணு பரிசளித்தார்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 60ஆம் ஆண்டு நிறைவு வைர விழாவையொட்டி நிகழாண்டு முழுவதும் மாணவர்களுக்கான பல்வேறு கலை, இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி ஆக. 15ஆம் தேதி இணையவழியில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் (தலைப்பு- மாநில சுயாட்சி- இந்திய ஒற்றுமையின் புதிய குரல்) சென்னையிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஏ தமிழ் பயிலும் மாணவர் நா. அருண் மாநில அளவில் முதல் பரிசை வென்றார்.
அதே போட்டியில், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பிஏ வரலாறு பயிலும் மாணவி ஜ. ஆஷிமா மாநில அளவில் 4ஆம் பரிசைப் பெற்றார்.தொடர்ந்து பெருமன்றத்தின் நிறுவனர் ப. ஜீவானந்தம் அவர்களின் பிறந்த நாளையொட்டி 'செந்தமிழ் நாடிது எங்கள் செந்தமிழ் நாடிது' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் ஜ. ஆஷிமா, மாநில அளவில் முதல் பரிசைப் பெற்றார்.
மேலும், தந்தைப் பெரியாரின் பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட 'அன்புள்ள எம் தந்தையே…' என்ற தலைப்பிலான கடிதம் எழுதும் போட்டியில், ஜ. ஆஷிமா மாநில அளவில் மூன்றாம் பரிசையும் பெற்றுள்ளார்.இவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் புத்தகங்களை, தமிழ்நாட்டின் மூத்த பொதுவுடைமை இயக்கத் தலைவர் ஆர். நல்லகண்ணு ஞாயிற்றுக்கிழமை (10-10-2021) மாலை அவரை தனது இல்லத்துக்கு வரவழைத்து வழங்கிப் பாராட்டி வாழ்த்தினார்.
அப்போது, கலை இலக்கியப் பெருமன்றத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் பேராசிரியர் கணபதி இளங்கோ, பெருமன்றத்தின் தொல்லியல் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் அறிவரசன், பரிசு பெற்ற மாணவர்களின் பெற்றோரும் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.