6 மணி நேரத்தில் இரண்டு அறுவை சிகிச்சைகள்: சென்னையில் மருத்துவர்கள் அசத்தல்
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகளை 6 மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடித்த சென்னை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள்.;
சென்னை : அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவா் தொடை எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இடது சிறுநீரகத்தில் புற்றுநோய்க் கட்டி இருப்பதும், அவை வேறு சில இடங்களுக்கும் பரவியிருந்தது. அவரது தொடை எலும்பு பகுதியில் கட்டியாக அது பரவி எலும்பு முறிவுக்கு வழிவகுத்துள்ளது. இதையடுத்து, அந்த மருத்துவமனை மருத்துவ வல்லுநா்கள், தொடை எலும்பில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை செய்து நீக்கவும், பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை அகற்றவும் திட்டமிட்டனா்.
அதன்படி, சிறிய துளையிட்டு அந்த அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதில் ஒரு புதிய முயற்சியாக இரு அறுவை சிகிச்சைகளையும் ஒரே நேரத்தில் செய்தனர். தொடர்ந்து 6 மணி நேரத்தில் அவற்றை வெற்றிகரமாக செய்தனர்.
புற்றுநோய் கட்டி பரவியிருந்த முழங்கால் மூட்டு முழுமையாக அகற்றப்பட்டு நவீன முறையில் செயற்கை மூட்டு மாற்றப்பட்டது. அதே வேளையில் லேப்ராஸ்கோபி ரேடிக்கல் நெஃப்ரெக்டோமி எனப்படும் அதி நவீன தொழில்நுட்பத்தில் பாதிக்கப்பட்ட சிறுநீரகமும் அகற்றப்பட்டது. அடிவயிற்றில் 5 மில்லி மீட்டா் அளவில் துளைகளிடப்பட்டு அந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதன் பயனாக அறுவை சிகிச்சைக்கு அடுத்த நாளே நோயாளி நடக்கத் தொடங்கினாா். கரோனா தொற்று காலத்தில் சிக்கலான சிகிச்சைகளை மேற்கொள்வது நாட்டிலேயே இது முதன்முறை தனியார் மருத்துவமனை குழு துணைத்தலைவர் பிரீத்தா ரெட்டி தெரிவித்துள்ளார்