மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரிடம் தி.நகர் துணை ஆணையர் விசாரணை!
பள்ளி மாணவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட ஆசிரியரிடம் தி.நகர் துணை ஆணையர் ஹரிகிரன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.;
சென்னை கே.கே.நகரிலுள்ள தனியார் பள்ளியில் மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், அப்பள்ளியின் முதல்வருக்கு முன்னாள் மாணவர்கள் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பள்ளியில், வணிகவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் ராஜாகோபாலன் . இவர் ஆன்லைன் வகுப்புக்கு அரைகுறை ஆடையுடன் வருவது, மாணவிகளின் மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் தவறான நோக்கத்துடன் குறுஞ்செய்திகள் அனுப்புவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் தியாகராயநகர் துணை ஆணையர் ஹரிகிரன் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி ஆகிய இருவரும் தற்போது வடபழனி காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.