கடலில் இருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலப்பரப்பிற்கு வந்ததே மழைக்கு காரணம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டம் காணப்படும். ஒருசில பகுதிகளில் கன முதல் மிககன மழை பெய்யக்கூடும்

Update: 2021-12-31 12:15 GMT

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் 

கடலில் இருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலப்பரப்பிற்கு வந்து சென்றதே சென்னை மழைக்கு காரணம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கம் அளித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை மற்றும் வானிலை நிலவரம் குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில்  இயக்குநர் புவியரசன் மேலும் கூறியதாவது: தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும்,

டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.நாளை கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகனமழையாக சென்னை டிஜிபி அலுவலகம் 24 செ.மீ ஆவடி (திருவள்ளூர்) 23, எம்ஆர்சி நகர் (சென்னை) 21 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

நேற்றைய மழைகுறித்த விளக்கமளித்த அவர், கடலில் இருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலபரப்பிற்கு வந்து சென்றாதல் அறிவிப்புகள் மாறும், அதற்கு ஏற்ப அறிவிப்புகள் மாற்றி வழங்கப்படும். நேற்று பெய்த மழைக்கும் மேக வெடிப்புக்கும்(cloud burst) தொடர்பில்லை. அந்தமான் மற்றும் தமிழகம் இடைப்பட்ட இடத்தில் சென்னை மற்றும் அந்தமானில் மட்டும் தான் கடற்பரப்பில் தரவுகள் பெறப்படுகிறது. மேலும், நமது மற்றும் அண்டை நாடுகளின் செயற்கோள் உதவியுடன்தான் அறிவிப்புகள் வழங்கப்படுகிறது.

ரேடார் உதவியுடன் மேகம் உருவாகும் இடம் அதன் வளர்ச்சி நகர்வுகளை மட்டுமே வழங்க முடிகிறது, காரைக்கால் ரேடார் உதவியுடனே தற்போது இவை அறிவிக்கப்பட்டு வருகிறது, மேலும் துல்லியமாக வழங்க நவீன இயந்திரங்கள் தேவைப்படுகிறது. இன்னும் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என்ற அவர் வடகிழக்கு பருவ காற்று இன்னும் தமிழக பகுதிகளை நோக்கி வீசுவதால் அவ்வப்போது ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் புவியரசன் தெரிவித்தார்.

Tags:    

Similar News