நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு
திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது;
தமிழகத்தில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், முதல்வராக பதவி ஏற்க உள்ள நிகழ்ச்சி எளிய முறையில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் (4.5.2021) செவ்வாய் கிழமை மாலை 6 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள "கலைஞர் அரங்கில்" நடைபெறும். இக்கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்"என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.