ஆவின் முறைகேடுகள் முழுமையான விசாரணை வேண்டும் - தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள்
ஆவின் முறைகேடுகள் தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
ஆவின் முறைகேடுகள் தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,
கடந்த கால அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் சீனியர் பேக்ட்ரி அசிஸ்டெண்ட், பொது மேலாளர், மேலாளர் என ஒவ்வொரு பணியிடங்களுக்கும் 10 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை விலை வைத்து, அப்பணியிடங்களை தகுதியற்றோருக்கு பணத்திற்காக விற்பனை செய்து படித்த, திறமையான இளைஞர்களின் அரசு பணி எனும் கனவில் மண் அள்ளிப் போட்ட கும்பல் மீது ஆவின் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனர் கந்தசாமி ஐஏஎஸ் அவர்களை விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் மனதார பாராட்டுகிறது, வரவேற்கிறது.
அதே நேரம் ஜனவரி-1 முதல் ஜூன்-15 வரை மட்டும் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது எனும் கோணத்தில் விசாரணை நடத்தாமல் கடந்த 10ஆண்டுகளில் ஆவினில் நடைபெற்ற அனைத்து பணி நியமனங்கள் குறித்தும் உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும்.
அத்துடன் தமிழகம் முழுவதும் உள்ள பால் மொத்த குளிர்விப்பான் நிலையங்கள் (BMC), பால் குளிரூட்டும் நிலையங்களில் (MCC) நடைபெறும் பல லட்சம் ரூபாய் பால் கொள்முதல் மோசடிகள், பால் விநியோகம் மற்றும் விற்பனையில் ஆவினின் கூட்டுறவு சங்க விதிகளை மீறி செயல்பட்டு தங்களின் சுயலாபத்திற்காக C/F ஏஜென்ட் நியமனம் செய்து அதன் மூலம் செய்த பல கோடி ரூபாய் முறைகேடுகள், ஆரூத்ரா உள்ளிட்ட பல்வேறு தனியார் பால் நிறுவனங்களுக்கும், இடைத்தரகர்களுக்கும் குறைந்த விலைக்கு பால் மற்றும் பால் பவுடர் (SMP) வழங்கி அதனால் ஏற்பட்ட பல கோடி ரூபாய் இழப்புகள்,BMC, MCCகளில் கொள்முதல் செய்யப்பட்டு, பால் பண்ணைகளில் பேக்கிங் செய்து விற்பனை போக உபரியாகும் பாலினை பவுடராக மாற்றுவதில் நடைபெற்ற பல கோடி ரூபாய் முறைகேடுகள், பால் பண்ணைகளுக்கு தேவையின்றி வாங்கிப் போடப்பட்டு, துருப்பிடித்துப் போய் பயன்பாடற்ற நிலையில் இருக்கும் இயந்திர தளவாடங்கள் மூலம் நடந்த ஊழல்கள் போன்றவற்றையும் விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைத்து முறையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், விசாரணையில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் என எவராக இருந்தாலும் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஆவின் நிறுவனத்தின் கணக்கில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் ஆவினில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகள் தொடர்பாக தாமதமின்றி உரிய விசாரணை நடத்தப்பட்டால் தோண்டத் தோண்ட பல கோடி ரூபாய் ஊழல்கள், முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும். அவ்வாறு வெளிச்சத்திற்கு வரும் தவறுகள் மீது தாமதமின்றி விரைவான நடவடிக்கை எடுக்கப்படுமானால் ஆவினிற்கு தமிழக அரசு மானியம் வழங்காமலேயே நல்ல லாபத்தில் இயங்க வைக்க முடியும்.
அதுமட்டுமின்றி இதுவரை பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கான பல கோடி ரூபாய் நிலுவை தொகையை உடனடியாக வழங்கிடவும், வருங்காலங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான தொகையை நிலுவையின்றி பணப்பட்டுவாடா செய்யவும் முடியும்.
எனவே நேர்மையான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து உரிய விசாரணைக்கும், நடவடிக்கைக்கும் உத்தரவிடுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.