அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக ஏன் பங்கேற்கவில்லை?: அமைச்சர் தகவல்
ஆளுநரை திருப்திப்படுத்தவே அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் தேர்தல் பணிமனை அலுவலகத்தை துவங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியதாவது:
நீட் தேர்வுக்கு எதிராக எடுக்கப்படும் சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் என்ற செயல்பாட்டை எப்படி புரிந்து கொள்வது என தெரியவில்லை. எந்த ஆளுநரும் செய்யாத காரியத்தை இந்த ஆளுநர் செய்திருக்கிறார் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூடி அடுத்த கட்டம் நோக்கிய கூட்டம் அதில் கருத்து தெரிவிக்க கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் அறிக்கையாக கொடுத்திருக்கின்றனர் இதை ஆளுநரை திருப்தி செய்ய எடுத்த நடவடிக்கையாகதான் பார்க்க முடியும் என தெரிவித்தார்.
மேலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது மட்டும் தான் தமிழக அரசின் குறிக்கோள் என தெரிவித்த அவர், இருமொழிக் கொள்கை இந்தித் திணிப்பு, தமிழகத்தில் பெயர்மாற்றம் தொடர்பான சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மசோதாவாக ஆளுநருக்கு அனுப்பிய போது, அவர் எந்த கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் இவர் அப்படி நடந்துகொள்ளவில்லை என தெரிவித்தார்
சமூக நீதி கூட்டமைப்பில் அதிமுக பங்கேற்காது என ஓபிஎஸ் கருத்துக்கு பதில் அளித்த அவர் இந்தியாவில் சமூக அக்கறை உள்ள அனைவரையும் ஒருவர் ஒன்றிணைக்க வேண்டும், பூனைக்கு முதலில் மணி கட்டுவது யார் என்றுதான் கேள்வி அதனை முதல்வர் செய்துள்ளார். ஆனால் அந்த கூட்டமைப்பிற்கு தன்னை தலைவர் என முதல்வர் கூறவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரையிலும் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தர வேண்டும், எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்து வருகிறது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என தெரிவித்தார்.