தமிழகத்தில் அக். 1 முதல் ஏசி பஸ்கள் இயங்கும்: அமைச்சர் கண்ணப்பன்

தமிழகத்தில், அக்டோபர் 1 முதல், 'ஏசி' பஸ்களை இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-25 04:30 GMT

இது தொடர்பாக, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மே 10 முதல்,  மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே, 'ஏசி' பஸ்கள் இயக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால், சமூக இடைவெளி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, மீண்டும் 'ஏசி' பஸ்களை இயக்க, முதல்வர் அனுமதி அளித்துள்ளார்.

இதன்படி, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 48 பஸ்கள்; அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், இருக்கை வசதியுள்ள 100 பஸ்கள், படுக்கை வசதியுள்ள 34 பஸ்கள்; இருக்கை மற்றும் படுக்கை வசதியுள்ள 206 பஸ்கள் என, மொத்தம் 340 பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. மேலும், விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 314 பஸ்கள் உட்பட மொத்தம் 702 குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படும்.

கடந்த ஐந்து மாதங்களாக இயக்கப்படாமல் இருந்த பஸ்கள், நன்கு பராமரிக்கப்பட்டு, கொரோனா தொற்று பரவாத வகையில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டுள்ளது. பயணியர் முகக்கவசம் அணிந்து, கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்து, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News