கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு 3 மடங்கு அதிகமான நிதி; டாக்டர்கள் சங்கம் கோரிக்கை
நிதிநிலை அறிக்கையில் கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு 3 மடங்கு அதிகமான நிதியை ஒதுக்கிட வேண்டும் என டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தினர்.
சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் சமூக சமத்துவத்திற்கான மருத்துவ சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், தமிழக அரசு அறிவிக்க இருக்கும் நிதிநிலை அறிக்கையில் கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு 3 மடங்காக அதிகரித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக அரசு தொடங்கி உள்ள மக்களை தேடி மருத்துவ திட்டம் மிகவும் வரவேற்க கூடியது. மேலும் அந்த திட்டத்தின் கீழ் பணிப்புரிய தனியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் . கொரோனாவால் இறந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பாக 25 லட்சம் நிதி வழங்கபட்டுள்ளது. இதில் பலர் விடுப்பட்டுள்ளனர். அதனை கருத்தில் கொண்டு விடுப்பட்டவர்களுக்கு உடனடியாக நிதி உதவி கொடுக்க வேண்டும்.
மேலும் கொரோனாவால் இறந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கண்டிப்பாக அரசு வேலை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் தொடர்ந்து டெல்டா வைரஸ் ஜிகா வைரஸ் பரவ கூடிய சூழல் அதிகமாக உள்ள நிலையில், அதனை தடுக்க தமிழக அரசு மத்திய அரசை நம்பாமல் சொந்த சிலவில் உடனடியாக ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பல முறைகேடுகள் நடைபெற்று வருகிறது அதனால் அரசு மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சை இலவசமாக அரசு வழங்க வேண்டும். இந்தியா முழுவதும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் தமிழக அரசு முன்னோடியாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கர்ப்பப்பை வாய் புற்று நோய் அதிகமாக பரவி வருகிறது. இந்த புற்று நோயால் 8 நிமிடத்திற்கு ஒரு பெண் இறக்கிறார். அதை தடுப்பதற்கான தடுப்பூசியை தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும். இந்த தடுப்பூசியை உடனடியாக 8 முதல் 13 வயதுடைய பெண் குழந்தைக்கு செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் அரசு மருத்துவர்களுக்கு முதுகலை படிடிப்பில் 50 விழுக்காடு ஒதுக்க வேண்டும் என்பதை சட்டசபையில் உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க முயற்சித்தாலும் மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.