துபாய், சாா்ஜாவிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.1.64 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

துபாய், சாா்ஜாவிலிருந்து சென்னைக்கு கடத்திய ரூ.1.64 கோடி மதிப்பு 3.18 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-10-19 08:53 GMT

விமானத்தில் கடத்திவரப்பட்ட தங்கம்.

துபாய், சாா்ஜா நாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த 6 விமானங்களில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.1.64 கோடி மதிப்புடைய 3.18 கிலோ தங்கம்,ஐபோன்கள்,லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பெண்கள் உட்பட 8 பயணிகளை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை கைது செய்து விசாரணை 

சென்னைக்கு வெளிநாடுகளிலிருந்து பெருமளவு தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறையினா் கடந்த 2 தினங்களாக சென்னை சா்வதேச விமானங்களில் வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து, சந்தேகப்படும் பயணிகளை நிறுத்தி சோதனையிட்டனா்.

இந்நிலையில் துபாயிலிருந்து வந்த ஃபிளை துபாய், எமரேட்ஸ், ஏா்இந்தியா, சாா்ஜாவிலிருந்து ஏா் அரேபியா ஆகிய 4 விமானங்களில் வந்த பயணிகளை சோதனையிட்டனா். அப்போது சென்னையை சோ்ந்த 2 பெண் பயணிகள், ராமநாதபுரம் மற்றும் ஆந்திராவை சோ்ந்த 4 ஆண் பயணிகள் ஆகிய 6 போ்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவா்களை நிறுத்தி சோதனையிட்டனா்.

அவா்களுடைய உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்த தங்க செயின்கள் மற்றும் தங்கக்கட்டிகளை கைப்பற்றினா். 6 பேரிடமிருந்து 2.67 கிலோ தங்கத்தை கைப்பற்றினா். அதோடு அவா்களின் சூட்கேஸ்களில் மறைத்து வைத்திருந்த 14 ஐபோன்கள், 8 லேப்டாப்களையும் பறிமுதல் செய்தனா்.

தங்கம் மற்றும் ஐபோன், லேப்டாப்களின் சா்வதேச மதிப்பு ரூ.1.40 கோடி. இதையடுத்து கடத்தல் பயணிகள் 6 பேரையும் சுங்கத்துறை கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.

அதேபோல் நேற்று முன்தினம் துபாய், சாா்ஜாவிலிருந்து வந்த எமரேட்ஸ்,ஏா் அரேபியா விமான பயணிகளை சோதனையிட்டதில் சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சோ்ந்த 2 ஆண் பயணிகளை சுங்கத்துறை சோதனையிட்டதில்,அவா்களின் உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்த 466 கிராம் தங்கப்பசை,மற்றும் 45 கிராம் தங்க செயின் மொத்தம் 511 கிராம் தங்கத்தை கைப்பற்றினா். அதன் சா்வதேச மதிப்பு ரூ.23.53 லட்சம்.இதையடுத்து 2 பயணிகளையும் சுங்கத்துறை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறையினா் நடத்திய சோதனைகளில் துபாய்,சாா்ஜா ஆகிய நாடுகளிலிருந்து வந்த 6 விமானங்களில் 2 பெண்கள் உட்பட 8 பயணிகளிடமிருந்து ரூ.1.64 கோடி மதிப்புடைய 3.18 கிலோ தங்கம்,ஐபோன்கள்,லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News