தடையை மீறி ஏமன் நாட்டில் தங்கி திரும்பிய விழுப்புரத்தை சோ்ந்த பயணி கைது
தடையை மீறி ஏமன் நாட்டில் தங்கி திரும்பிய விழுப்புரத்தை சோ்ந்த பயணியை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர்.
சார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா ஏா்லைன்ஸ் பயணிகள் சிறப்பு விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட், ஆவணஙகளை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் (41) என்பவரின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதித்தனர். அவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிட வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளாா். அங்கிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட ஏமன் நாட்டிற்குச் சென்று அங்கு தங்கியிருந்து விட்டு வருவது தெரியவந்தது.
ஏமன், லிபியா ஆகிய நாடுகளுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்கள் யாரும் செல்லக்கூடாது என்று ஒன்றிய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தடை விதித்துள்ளது. அதை மீறி செல்லும் இந்தியா்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவாா்கள் என்றும் எச்சரித்துள்ளது. ஆனால் முருகன் இந்திய அரசின் எச்சரிக்கையை மீறி ஏமன் நாட்டிற்குச் சென்று வருவதை குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவரை வெளியில் விடாமல், தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினா். அப்போது முருகன், தனது சவுதி அரேபியா விசா காலாவதி ஆகிவிட்டதால், தன்னால் இந்தியா திரும்ப முடியவில்லை. எனவே ஏமன் நாட்டிற்கு சென்று அங்கு சில மாதங்கள் தங்கியிருந்து, ஏஜெண்ட்கள் மூலம் டூப்ளிகேட் ஆவணங்கள் பெற்று, சாா்ஜா வழியாக சென்னை வந்துள்ளதாக கூறினாா்.
ஆனால் முருகனின் விளக்கத்தை குடியுரிமை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்குச் சென்று வந்ததற்காக வழக்குப்பதிவு செய்து, அவரை மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். விமான நிலைய போலீசார் அவர் மீது குடியுரிமை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தனா். அதோடு அவரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.