சென்னையில் மத்திய அரசை கண்டித்து தமிழக காங்கிஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்தியின் செல்போனை ஓட்டுக் கேட்டதைக் கண்டித்து சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-07-22 18:14 GMT

சென்னையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நடத்திய  ஆர்ப்பாட்டம்

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சைதாப்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகை வரை முற்றுகை போராட்டம் நடைபெற்றது .

பெகாசஸ் வைரஸ் மூலம் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள் மற்றும் பத்திரிகையாளர்களை உளவு பார்த்த பாஜக அரசை கண்டித்தும், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தக் கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ராகுல் காந்தியின் செல்போனை வேவு பார்ததற்காக கண்டனம் தெரிவித்தனர்.

இதில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, "பெகாசஸ் உளவு மூலம் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. என் வீட்டில் நடப்பதை இஸ்ரேல் நிறுவனம் பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி வாழ்க்கை நடத்துவது.

என்.எஸ்.ஓ நிறுவனம் அரசாங்கத்துக்கு மட்டுமே சேவையாற்றும். பிரதமர் இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பாஜக ஜனநாயகத்தை காலில் போட்டு நசுக்குகிறது.

பெகாசஸ் மென்பொருள் மூலம் யாராலும் உளவு பார்க்க முடியும். இராணுவ தளபதி, சீன எல்லையில் உள்ள கமாண்டர் என்ன பேசுகிறார்கள் என இஸ்ரேலிய நிறுவனம் ஒட்டுக்கேட்டு எதிரி நாடுகளிடம் தகவலை விற்கலாம்.

நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து ஊடகங்கள் பேச வேண்டும் அதிகாரத்துக்கு பயந்து பல சிந்தனைவாதிகள், ஊடகங்கள் வாய் திறக்க அஞ்சுகின்றனர். பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்.

ஆளுநரிடம் மனு கொடுகக்கலாம் என நினைத்தேன், தவறு செய்ததே அவர்கள் தான் என்பதால் போராட்டத்தை மட்டும் நடத்துகிறோம்" என்றார். காங்கிரஸ் கட்சியினர் சிறிது தூரம் பேரணியாக சென்று பின்னர் கலைந்து சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட அக்கட்சி முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News